Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது... 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி ந...
தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!
2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூ யார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள்ளார்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை முறையிடப்பட்ட நிலையில், அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ள நேரத்தில், அவரை தவறான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் நியூ யார்க் நீதிமன்றம் தண்டனை வெளியிடவுள்ளதாக வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.
அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையும் படிக்க : மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், இந்த வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது. எனினும், அதனை எதிா்த்து டிரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவைத் தள்ளுபடி செய்தாா்.
மேலும், சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாது என்று நீதிபதி ஜுவான் எம். மொ்சன் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், குற்றவியல் வழக்கில் தண்டனை என்பது விளைவுகளை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.