பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!
``பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும், இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்'' -அருந்ததி ராய்
வயநாடு இலக்கியத் திருவிழா 2024
வயநாடு இலக்கியத் திருவிழா 2024 கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்றுள்ளார். அவரை மலையாள நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் செய்திருந்தார்.
நேர்காணலில் அருந்ததி ராய்யின் 'சின்னஞ்சிறிய பொருள்களின் கடவுள்' நூல் தனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரிவித்தார் பார்வதி. மேலும் பதின் வயதிலிருந்தே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பின்தொடர்வதாகவும் கூறினார்.
17 வயதில் பார்வதி ஒரு விழாவில் வாசகராக கலந்துகொண்டு அருந்ததி ராய்யிடம் 'நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள்?' எனக் கேட்டதையும், அதற்கு அருந்ததி ராய், 'தைரியமாக இருப்பதற்கு எதுவுமில்லை. எல்லாவற்றையும் மாற்றிவிட நம்மால் முடியுமா என சிந்திப்பது அர்த்தமற்றது. நீங்கள் ஒரு மனிதராக உங்களது பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.' என பதிலளித்ததையும் நினைவுகூர்ந்தார்.
அந்த வயதில் அந்த பதில் தனக்கு புரியவில்லை என்றும், இப்போதுதான் அதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள முயற்சிப்பதாகவும் பார்வதி தெரிவித்தார்.
40 நிமிடம் நீண்ட இவர்களது நேர்காணலில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், கேரளாவில் பெண்களின் நிலை குறித்தும் உரையாடினர்.
பொருளாதார விடுதலை மட்டும் போதாது!
ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பெண்கள் தங்கள் ஒடுக்குமுறையை அடையாளம் காண முடியாத அளவுக்கு ஆள்கொள்ளப்பட்டு, கவனக்குறைவாக ஒடுக்குமுறைகளுக்கு பங்களிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
"ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்தபோது மிகவும் வருத்தமடைந்தேன். அது சினிமாக்காரர்களின் அருவருப்பான ரகசியம்" என்றார் அருந்ததி ராய். மேலும், அவர் இந்த பிரச்னை ஆண்கள் - பெண்கள் வாதமாக இருந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, "இதற்கு கிரிமினல் நடவடிக்கை மட்டுமேபோதாது, கலாச்சார சூழலில் மாற்றம் வரவேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார்.
கேரள பெண்கள் பொருளாதாரரீதியாக விடுதலைபெற்றாலும் பிறவழிகளில் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்றார் அருந்ததி ராய்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, "கேரளாவில், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உள்ளது, ஆனால் அந்த சுதந்திரத்தில் ஒரு தலைமுறையினரின் குற்ற உணர்வு பிணைக்கப்பட்டுள்ளது" என்றார் பார்வதி திருவோத்து.
நம்பிக்கைத் தெரிவித்த Arundhati Roy!
ஹேமா கமிட்டி குறித்து பேசுகையில் பார்வதி, 'குறைந்தபட்சம் இந்தவிஷயம் துற்நாற்றமாவது வீசுகிறதே' என்றார். அத்துடன் ஹேமா கமிட்டி விவகாரத்தில் மலையாள திரைத்துறையினரின் மௌனம் தன்னை உட்சபட்சமாக அச்சம் கொள்ள வைப்பதாகத் தெரிவித்துள்ளார். "எவ்வித உரையாடல்களும் எழவில்லை, கமிட்டிகள் உருவாக்கப்படவில்லை. மாற்றத்திற்காக மேன்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார் பார்வதி.
தண்டனை அதன்போக்கில் நிறைவேற்றப்பட்டும் என்றவர், "நாம் இனி இதுபோல நடக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக குற்றம் செய்யும் மாஃபியா அவர்களை அச்சுறுத்தும் விஷயங்களுக்கு மட்டுமே எதிர்வினையாற்றுகின்றனர்." என்றார்.
இளம் தலைமுறையினரைப் பார்க்கும்போது நம்பிக்கை எழுகிறதா? என அருந்ததி ராய் கேட்டதற்கு, "பெரும்பாலானவர்கள் இதுகுறித்து பேசுவதில்லை. பேசுபவர்களும் வெறுமனே தாங்கள் 'விழிப்பானவர்கள்' என்பதைக் காட்டிக்கொள்ளவே பேசுகிறார்கள். குற்றவாளிகள் படங்களைத் தயாரிப்பதும் அவர்களுக்கும் பணம் கிடைக்கும் வேகமும் 'மிரட்டுகிறது'. அதேவேளையில் குற்றங்களுக்கு எதிராக இருந்தவர்கள் தேவையான நிதி இல்லாமல் இருக்கின்றனர்." என்றார் பார்வதி.
எனினும் குற்றத்துக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் வலிமையான திரைப்படங்களை எடுப்பதனால் "மாஃபியா பிரபுக்களின்" நிலை மாறும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அருந்ததி ராய்.