வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க...
2024 Rewind: 'ஆவேசம் டு Rifle Club' கவனம் ஈர்த்த மல்லுவுட்... எந்த படங்கள், எதில் பார்க்கலாம்?!
மலையாள திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதுமே மவுசு அதிகம். இந்த 2024 ஆண்டில் வெளியான ஏராளமான மலையாள திரைப்படங்கள் கோலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவையேத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. இம்முறை மலையாள சினிமா விமர்சன ரீதியாக மட்டுமின்றி மொழி கடந்த ரசிகர்களின் வரவேற்பால், நல்ல வசூல் சாதனையையும் படைத்து பலரின் பாராட்டுகளைப் பெற்று. அவை என்னென்ன என்பது குறித்த ஒரு குட்டி ரீவண்ட் இது.
பிரமயுகம்
இந்த ஆண்டின் முதல் மலையாள திரைப்படமாக கருப்பு - வெள்ளையில் திரையரங்கில் வெளியாகி வியக்க வைத்தத் திரைப்படம் 'பிரமயுகம்'. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சமன் போட்டி' என்ற மாந்திரீகரின் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. மம்மூட்டியின் தேர்ந்த நடிப்பும், ராகுல் சதாசிவத்தின் இயக்கமும் திரையில் மிளிரியது. புதியப் புதிய மாற்று சினிமாக்களுக்குப் பெயர்போன மலையாள சினிமாவின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக் கல்லான அமைந்தது இப்படம்.
இந்த மாந்திரீக ஹாரர் திரில்லரை 'SonyLIV' ஓடிடி தளத்தில் காணலாம்.
மஞ்சுமல் பாய்ஸ்
இந்த ஆண்டின் முதல் அதிரடி ஹிட்டாக அமைந்தது 'மஞ்சுமல் பாய்ஸ்'. குணா குகையில் விழுந்த சுபாஷ் காப்பாற்றப்படுதைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் குவிந்தது. 'உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன...' என ராஜா - கமல் காம்போவின் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மனதினை நெகிழச் செய்ய நட்பைக் கொண்டாடும் வெற்றிப்படமானது இது. 'குணா' திரைப்படத்திற்குப் பிறகு கொடைக்கானல் குணா குகையைப் பார்க்க மீண்டும் கூட்டம் குவிந்தது இப்படத்திற்குத்தான்.
நட்பைச் சொல்லும் இந்த குணா குகை பயண அனுபவத்தை ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் காணலாம்.
ஆடுஜீவிதம்: The Goat Life
இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. பிருத்விராஜின் நடிப்பும், அற்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்க வைத்திருந்தது. இப்படத்தின் ஆன்மாவாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், தனிமை, பிரிவின் வலியைக் கடத்தும் கலை நேர்த்திக் கொண்ட இப்படமும் மலையாள சினிமாவின் மற்றுமொரு மைல்கல்.
நாம்முடைய வாழ்வு எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள 'Netflix' ஓடிடி தளத்தில் இப்படத்தைக் காணலாம்.
ஆவேசம்
பெங்களுரு சிட்டி கேங்கஸ்டர் கதையை நகைச்சுவை, கொண்டாட்டம், நட்பு, தாய்ப்பாசம், தனிமையின் ஏக்கம் என பக்காவான பொழுதுபோக்குடன் கவன ஈர்த்தப் படம் 'ஆவேசம்'. பகத் பாசிலின் வியக்க வைக்கும் 'ஒன் மேன் ஷோ' நடிப்பு படத்திற்கு கூடுதல் சுவை கூட்டியிருக்கும். இப்படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.
இந்த சிட்டி கேங்கஸ்டரின் ஆக்ஷன் அலப்பறைகளை 'Amazon Prime Video' ஓடிடியில் காணலாம்.
வர்ஷங்ஙள்க்கு சேஷம்
சினிமாவைக் கனவாகக் கொண்ட இருவரின் வாழ்க்கையைப் பேசியது வினீத் ஸ்ரீனிவாசனின் இத்திரைப்படம். சினிமா வாழ்வு இரண்டு நண்பர்களை எப்படியெல்லாம் மாற்றியது, அதில் இருவரும் பெற்ற அனுபவங்கள் என்னனென்ன என்பதை மனம் ஏங்க திரையில் பேசி ரசிகர்களின் மனம் கவர்ந்தது இப்படம். வினித் சீனிவாசன் இயக்கி நடித்திருக்கும் படம். பிரணவ் மோகன்லால், தியான் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன், பசில் ஜோசப், ஒய்.ஜி.மகேந்திரன், நிவின் பாலி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இரண்டு நண்பர்களின் இந்த சினிமா வாழ்வை 'SonyLIV' ஓடிடி தளத்தில் காணலாம்.
Premalu
இம்முறை மலையாளத்திலிருந்து வந்து தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ஹிட்டடித்தக் காதல் கதை 'Premalu'. கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். பெங்களுரு சிட்டியில் வேலை தேடி அலையும் மிடில் கிளாஸ் இளைஞன், விரும்பிப் பெண்ணைக் காதலித்துக் கரம் பிடிப்பதுதான் இதன் கதைக்களம். காமடி, கலாட்டா, காதல் என கலகலப்பான இந்தக் காதல் கதையை 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில் காணலாம்.
Thalavan
ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜு மேனன், ஆஷிஃப் அலி, மியா ஜார்ஜ், அனு ஶ்ரீ, திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'Thalavan'. வழக்கை விசாரணை செய்து தீர்வு காணும் திரில்லர் ஒருபக்கம் இருந்தாலும், காவல்துறையின் உள்ளே இருக்கும் பிரச்னைகளையும், அதிகாரிகளின் ஆதிக்க மனநிலையையும் பேசி தனித்துவமாக மனம் கவர்ந்தது இத்திரைப்படம்.
இந்த போலீஸ் க்ரைம் திரில்லரை 'Sony LIV' ஓடிடி தளத்தில் காணலாம்.
Aattam
நாடகக் குழுக்களின் வாழ்வியலோடு, அங்கு நடக்கும் க்ரைம் சம்பவத்தால் தலைகீழாக மாறும் அவர்களின் வாழ்வை விறுவிறுப்பான திரில்லர் கதையாக சொல்கிறது இப்படம். ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் வினய் கோட்டை, ஜரின் ஷிஹாப், கலாபவன் ஷாஜோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரில்லர் கதையை 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Guruvayoor Ambalanadayil
பிருத்விராஜின் தங்கையைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளார் பாசில் ஜோசப். பிருத்விராஜ், பாசில் இருவரும் மாமன் மச்சானாக நெருங்கிப் பழக, பாசில் தனது முன்னாள் காதலி குறித்து பிருத்விராஜிடன் திட்டித் தீர்க்கிறார். ஆனால், அந்த முன்னாள் காதலி பிருத்விராஜின் மனைவிதான் என்று தெரிய வர, குடும்பத்தில் நடக்கும் சண்டை, சச்சரவுகள்தான் இப்படம். தமிழில் ஹிட் அடித்த அழகிய லைலா பாடலை மீண்டும் ட்ரெண்டாக்கியது இந்த படம் தான்.
உறவுச் சிக்கல்களை, அதன் புரிதலை கலாட்டாவுடன் ஜாலியாகப் பேசும் இப்படத்தை 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் காணலாம்.
Guruvayoor Ambalanadayil விமர்சனம்
Ullozhukku
மழை வெள்ள காலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வதியில் கணவன் இறந்துபோகிறார்.கணவன் இறந்த பிறகு, காதலனுடன் திருமணம் முடிக்கத் திட்டமிடுகிறார் பார்வதி. ஆனால், தனிமையில் தவிக்கும் மாமியாரின் பாசப் போராட்டம் அவரைத் தடுக்கிறது. இதற்கிடையில் பார்வதி தன் மகனை கொலை செய்தாக மாமியாருக்குச் சந்தேகம். நோய்வாய்ப்பட்ட மகனை, தனக்குத் திருமணம் செய்துவைத்ததாக பார்வதிக்குக் கோபம். 'வயிற்றில் வளரும் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடு' என பார்வதியிடன் வாதிடும் மாமியார் ஊர்வசி. இப்படி பலச் சிக்கல்கள் வெள்ளம்போல சூழ்கின்றன இவர்கள் வாழ்வில்.
மாமியரும் - மருமகளும் மன வெள்ளத்தில் தத்தளித்து மீழும் இந்தக் கதையை 'Amazon Prime Video'.வில் காணலாம்.
Vaazha
வாழ்வில் பொறுப்பற்று எதிர்கால வாழ்க்கைக் குறித்தச் சரியான தெளிவில்லாத, சரியாகப் படிக்காத நண்பர்கள் தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள், அவர்களை பெற்றோர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதே இதன் கதைக்களம். ஆனந்த் மேனன் இயக்கத்தில் ஜெகதீஷ், அஜீஷ், சிஜு, ஜோமோன் உள்ளிட்டோர் நடித்துள்ள்னர்.
இந்த ஜாலியான நண்பர்களின் சேட்டைகளை 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் காணலாம்.
ARM
மண்ணையும், மக்களையும் காப்பாற்றி மனிதத்தைக் கற்பிக்கும் இளம் வீரனின் ஃபேன்டஸி திரைப்படம் இது. ஜித்தின் லால் இயக்கியிருக்கும் இப்படத்தில் டொவினோ தாமஸ், பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இளம் வீரனின் இந்த பேரன்பையும், பெரும் போர் குணத்தையும் 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில் காணலாம்.
Kishkindha Kaandam
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வாழும் வயதான அப்புபிள்ளாவின் மருமகள், பேரன் இருவரும் இரத்த வெள்ளத்தில் தனது துப்பாக்கியால் இறந்துவிடுகிறார்கள். இந்தப் பெரும் சோகத்திற்குப் பிறகு மகன் அஜய் சந்திரன், அபர்ணாவை திருமணம் செய்து வாழ்வை புத்துயிர்ப்புச் செய்ய முயல்கிறார். ஆனால் உளவியல் பட்டப்படிப்பைப் படித்திருக்கும் அபர்ணா, கணவரின் மகன், முன்னாள் மனைவி இறப்பில் சந்தேகம் கொண்டு, வீட்டில் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார். சந்தேகத்திற்குரிய அப்புபிள்ளாவின் நடத்தைகளை கண்கானிக்கிறார். அவரது புலனாய்வில் கணவன் அஜய் சந்திரனின் ஆழ்மன ரகசியங்கள் அவிழுக்கப்படுவதும், அப்புபிள்ளாவின் செயல்களைப் புரிந்து கொள்வதும்தான் இதன் கதைக்களம். தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில் விஜயராகவன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். திரைக்கதையை எழுதியவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பாஹுல் ரமேஷ் தான்.
மனதின் ஆழ்மன ரகசிய முடிச்சுகளை அவிழுக்கும் இந்த திரில்லரை 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில்
Sookshma Darshini
புதிதாதகப் பக்கத்து வீட்டிற்குக் குடிவரும் குடும்பத்தில் நடக்கும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைப் புலனாய்வு செய்து கண்காணித்தப்படியே இருக்கிறார் நாஷ்ரியா நாஸிம். சந்தேகத்திற்குரிய அந்த வீட்டில் நடக்கும் விஷியங்கள் என்ன? அந்த வீட்டில் இருக்கும் பாசில் ஜோசப் என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்பதை விருவிருப்பான திரில்லர் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தை ஜித்தின் இயக்கியிருக்கிறார்.
அந்த வீட்டில் என்னதான் நடந்தது, நஸ்ரியா நாஸிமின் சந்தேகங்கள் உறுதியானதா என்பதை தியேட்டரில் பார்க்கத் தவறிருந்தால் விரைவில் ஓடிடியில் வெளியாகும், காணுங்கள்.
Rifle Club
ஆஷிக் அபு இயக்கத்தில் திலேஷ் போத்தன், அனுராக் காஷ்யப், வாணி, தர்ஷனா, சுரபி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது இத்திரைப்படம். கெளரவத்திற்காக மலையில் மிருகங்களை வேட்டையாடும் இரண்டு கேங்குகளுக்கு இடையே நடக்கும் ரைஃபில் ஆக்ஷன் திரில்லர் கதை இது. துப்பாக்கிகள் வெடிக்கும் திரில்லர் திரைப்படமான இது டிச 19 முதல் திரையரங்குகளில் காணலாம்.
மலையாளத்தில் இத்தனை திரைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது என்றாலும், 2024ம் ஆண்டு வெளியான 199 திரைப்படங்களில் 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், மற்றப்படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் கேரள திரைப்பட தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது. தேர்ந்த திரைக்கதை, நடிப்பு, உலகத்தரமான கதைகள் இருந்து மலையாள திரைப்படங்கள் பாராட்டுகளைக் குவித்தாலும், வசூலில் பின்தங்கியிருப்பது வருத்தமே என்கிறார்கள் திரைப்பட ரசிகர்கள். நல்ல சினிமாக்களைக் கொண்டாடுவோம்...
மல்லுவுட் பிரியரா நீங்கள்... நேரமிருந்தால் இந்தப் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுங்கள். இதில் உங்கள் ஃபேவரட் படம் எது? இதில் உள்ள படங்கள் அல்லாமல், நீங்கள் பரிந்துரைக்க நினைக்கும் படங்கள் எது என்பதையும் கமெண்டில் தெரிவிக்கவும்.!