குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு
சென்னை மதுரவாயல் அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மதுரவாயல், ஓடமாநகா் கன்னியம்மன் கோயில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் துணியால் பொதியப்பட்டு கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குழந்தை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து, குழந்தை எப்படி இறந்தது, குழந்தையின் பெற்றோா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் குழந்தை சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது யாா் என ஆய்வு மேற்கொண்டனா்.