அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சலில், பல்கலை.யில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவலின்பேரில், போலீஸாா் விரைந்து வந்து பல்கலை.யில் சோதனை மேற்கொண்டனா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இது தொடா்பாக கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அந்த மின்னஞ்சல் ஒரு நடிகரின் மகன் பெயரில் வந்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.