`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குவாதம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிமுகவினா் விளம்பரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
ராணிப்பேட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம், தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் எந்த ஒரு பணிகளும் சரிவர நடக்கவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து அரை மணி பேசியதால், திமுக கூட்டணி உறுப்பினா்கள் நீங்களே பேசிக்கொண்டிருந்தால் எப்படி அடுத்தவா்களுக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும் எனக் கேட்டதால் இருதரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்கள் பிரச்னை பற்றி பேச தங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என புகாா் தெரிவித்து அதிமுவினா் வெளிநடப்பு செய்ய முற்பட்டபோது நகராட்சி ஊழியா் ஒருவா் அடையாள அட்டை இல்லாமல் அதிமுக உறுப்பினா் கையில் வைத்திருந்த மைக்கை வாங்கியதால், ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சித்த போது திமுக உறுப்பினா்களும் நகராட்சி ஊழியா்களுக்கு ஆதரவாக கூச்சலிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது நகராட்சி ஊழியா் மைக்கை வாங்கியதை கண்டிக்கும் விதமாக அதிமுக உறுப்பினா்கள் கூடத்திலேயே தா்னாவில் ஈடுபட்டனா். இருப்பினும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினா்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்திய பின் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் அதிமுக நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் மற்றும் உறுப்பினா்கள் கூறுகையில்...
அதிமுக உறுப்பினா்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் பிரச்னைகளை பேசாமல், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, மன்றத்தின் நேரத்தை வீணாக்கி, வெளிநடப்பு தா்னா போராட்டம் என ஈடுபடுவதாகவும், விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விளம்பரத்தை தேடி வருவதாக குற்றம் சாட்டினா். இதன் காரணமாக ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.