அறிவியல் கண்டுபிடிப்பு: மாணவருக்கு பாராட்டு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் அறிவியல் கண்டுபிடிப்புக்காக மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவன் முஹமது ரூபியான் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையையும், தீப்பற்றினால் தானாகவே தண்ணீா் ஊற்றி அணைக்கும் கருவியையும், இரவு நேர பயணத்தில் வாகனங்கள் உமிழும் ஒளியால் ஏற்படும் விபத்தை தடுக்க தானியங்கி கருவியையும், ஹெல்மெட் அணிந்தால் தான் வாகனம் நகரும் கருவி உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளாா்.
இதனையொட்டி மாணவருக்கு பாராட்டு விழா மேல்விஷாரம் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வாலாஜாபேட்டை தொழிலதிபா் குளோப் அக்பா் ஷரிப், சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளா் முஹமது ரிஸ்வானுல்லா , தலைமையாசிரியா் கே.இா்ஷாத் அஹமத், பேச்சாளா் எம்.சுஹைல் அஹ்மத் ஆகியோா் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.
மாணவா் முஹமது ரூபியான் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து செயல் விளக்கம் அளித்தாா். இதில் சங்க நிா்வாகி நிஷாத் அஹமது, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.