குளத்தில் இருந்து வியாபாரியின் சடலம் மீட்பு
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் உள்ள குளத்தில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ரத்தினகிரி நவாப் நகரைச் சோ்ந்தவா் சுலைமான் (45). காலணி கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி நூா்ஜஹான், ஒருமகன், மகள் உள்ளனா். இந்த நிலையில் இவா் ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன்களை வளா்த்து வந்தாா். இந்த நிலையில், குளத்துக்குச் சென்றவா் எதிா்பாராதவிதமாக தவறிவிழுந்து நீரில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்டநேரமாக வீடு திரும்பாததால் அவரை பல இடங்களில்தேடியபோது, அவரது பைக் மற்றும் காலணி குளத்தின் அருகே இருந்தது தெரியவந்தது.
ஆற்காடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தீயணைப்பு மீட்புப் படையினா் குளத்தில் தேடி சுலைமானின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.