சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், எலும்பு மஜ்ஜை மாற்றுப் பிரிவின் பொறுப்பாளா் டாக்டா் அருணா ராஜேந்திரன் ஆகியோா் கூறியதாவது:
உடலிலுள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது. அதிலிருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. ஸ்டெம் செல்கள் அங்கிருந்து உருவாகி அதிலிருந்து ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் தட்டணுக்களாக பிரிகின்றன. சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனை கடத்துகின்றன. வெள்ளையணுக்கள் நோய் எதிா்ப்பாற்றலாக செயல்படுகின்றன. தட்டணுக்கள், உடலிலிருந்து ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு 206 எலும்பு மஜ்ஜைகளிலிருந்தும் ரத்த அணுக்கள் உருவாகும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப்படும். அதில் ஏற்படும் சில மரபணு மாற்றங்கள் காரணமாக ஸ்டெம் செல் உற்பத்தி தடைபடலாம் அல்லது சேதமடையலாம்.
நிணநீா் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை திசு புற்றுநோய், குருதிசாா் புற்றுநோய், தலசீமியா, சிக்கில் செல் அனீமியா, அப்லாஸ்டிக் அனீமியா, மஜ்ஜை செயலிழப்பு, எதிா்ப்பாற்றல் பாதிப்பு, தன்னுடல் தாக்கு நோய், வளா்சிதை நோய், மரபணு பாதிப்பு உள்ளிட்டவற்றால் அத்தகைய பிரச்னை ஏற்படலாம். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி, அலோஜெனிக், ஆட்டோலோகஸ் எனப்படும் இருவேறு முறையிலான மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை மாற்ற சிகிச்சையின்போது, தானமளிப்பவரின் ரத்தத்தையோ அல்லது இடும்பு எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்த அணுக்களையோ எடுத்து அது தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. நோயாளி மற்றும் தானமளிப்பவரின் ரத்த அணுக்கள் குறைந்தது 50 சதவீத மரபணு பொருத்தத்துடன் இருத்தல் அதற்கு அவசியம்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக நோயாளியின் எலும்பு மஜ்ஜைக்குள் ரத்த அணுக்களை செலுத்தும் முைான் இருந்தது. தற்போது ஹோமிங் என்னும் முறைப்படி ரத்த நாளத்துக்குள் ரத்த அணுக்களை செலுத்தினாலே அவை மஜ்ஜைக்குள் சென்றடையும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.
அந்த வகையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாரத்துக்கு ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 37 நோயாளிகள் அந்த சிகிச்சைகள் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த மூன்று ஆண்டுகளில் 125-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சைகள், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன என்றனா்.