Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ...
Zimbabwe: சிங்கங்கள், யானைகள் வாழும் காட்டில் 5 நாள்கள் உயிர்பிழைத்திருந்த 8 வயது சிறுவன்!
வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான காட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் 5 நாள்கள் வரை அங்கே உயிர் பிழைத்திருந்துள்ளார்.
மட்டுசடோனா தேசிய பூங்கா சிங்கங்கள், யானைகள் உள்ளிட்ட ஆபத்தான வன உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. இத்தனை ஆபத்தான காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் வசித்துவந்த சிறுவன் டினோடெண்டா பூண்டு (Tinotenda Pundu).
கடந்த டிசம்பர் 27ம் தேதி தனது கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூண்டு, அங்கிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் கண்டெக்கப்பட்டார். உடல் மிகவும் சோர்வாகவும் நீரிழப்பு ஏற்பட்டும் மோசமான நிலையில் இருந்தார். இருப்பினும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுசடோனா தேசிய பூங்கா மிகவும் வறட்சியான பகுதியாகும். வறட்சியை சமாளித்து வாழ கிராமத்தில் கற்றுக்கொடுக்கப்படும் படிப்பினைகளும் காட்டின் வளங்களும் சிறுவன் 5 நாள்கள் உயிர்பிழைத்திருக்க உதவியிருக்கிறது.
tsvanzva என்ற காட்டுப்பழத்தை உண்டும் வறண்ட ஆற்றின் படுகையில் குச்சியை வைத்து தோண்டி நீரருந்தியும் வாழ்ந்துள்ளார்.
ஜிம்பாப்வேயில் வறட்சி காரணமாக ஆற்று படுகையை தோண்டியே மக்கள் நீரருந்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிழைத்திருப்பதற்காக மனித ஆன்மா எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும் என்பதற்கு சிறுவனின் சாகச கதை ஒரு உதாரணம். பலரும் இந்த சிறுவனின் தைரியத்தைப் பாராட்டியுள்ளனர்.
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.முத்சா முரோம்பெட்ஸி சிறுவன் கடந்து வந்த சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். "அவன் நீண்ட தூரம் சென்றுள்ளான். திசை தவறி தன்னையறியாமல் ஆபத்தான மட்டுசடோனா பூங்காவில் நுழைந்துள்ளான். ஐந்து வேதனையான நாள்களை ஹாக்வே நதிக்கு அருகில் கழித்துள்ளான். கர்ஜிக்கும் சிங்கங்களும் கம்பீரமான யானைகளும் கடந்து செல்லும் பகுதியில் உயிர்பிழைத்துள்ளான்" என அவரது பதிவில் எழுதியுள்ளார்.
மேலும் சிறுவன் டினோடெண்டா பூண்டு உடன் இப்போது எந்த நேர்காணலும் மேற்கொள்ளக் கூடாது என எம்.பி தெரிவித்துள்ளதால் அவரது விரிவான அனுபவங்கள் பற்றி தகவல்கள் இல்லை.
ஆப்ரிக்காவிலேயே அதிக அடர்த்தியில் சிங்கங்கள் வாழும் பகுதியாக மட்டுசடோனா தேசிய பூங்கா அறியப்படுகிறது. சிங்கங்களால் தாக்கப்படுவதே அந்த காட்டில் உயிர் பிழைத்திருப்பதில் உள்ள மிகப் பெரிய சவால்.
மட்டுசடோனா தேசிய பூங்கா அருகே வசிக்கும் நியாமின்யாமி சமூகத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து டினோடெண்டா பூண்டுவைக் கண்டுபிடித்துள்ளனர்.