74 ஆண்டுகளுக்குப் பின்.. புதிய சாதனை படைப்பாரா தென்னாப்பிரிக்க கேப்டன்?
டிரான்ஸ்பார்மரையே திருடிய கும்பல்! - இருளில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்! - அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப்பிரதேசத்தின் படவுன் மாவட்டதில் இருக்கிறது சோராஹா கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறது. இந்தக் கிராமத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. வழக்கமான ஒன்றுதான் என நினைத்த கிராம மக்கள், அதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில்தான் கிராமத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் 250kVA டிரான்ஸ்பார்மரையே யாரோ திருடியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அதில் விற்கத் தகுந்த அனைத்தையும் திருடிவிட்டு, வெறும் எலும்பு கூடாக அந்த டிரான்ஸ்பார்மரை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அப்போதே உள்ளூர் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதுவரை கிராம மக்களுக்கு மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கிராம மக்கள், ``மின்சாரம் இல்லாமல், இன்வெர்ட்டர்கள், மொபைல் போன்கள், விவசாயத்துக்கான பம்புகள் என எதுவும் செயல்படுத்த முடியவில்லை. மின்சாரம் இல்லாததால், அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில வாரியத் தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த மின்சாரத் துறை அதிகாரி நரேந்திர சவுத்ரி, ``தற்காலிக நடவடிக்கையாக அருகிலுள்ள கிராமத்திலிருந்து மாற்று மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. பெரும்பாலான திருட்டுகள் குளிர்காலத்தில் நிகழ்கின்றன. காவல்துறையிடம் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்ள கேட்டிருக்கிறோம். அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையில் எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறோம். சிசிடிவி காட்சிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆரம்ப விசாரணைகள் நடந்து வருகிறது" என்றார்.
இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் ஒரு கும்பல், டிரான்ஸ்பார்மரை திருட முயன்றபோது, லைவ் வயரைத் தொட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். ஆனால், அந்தக் கும்பல், மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், டிரான்பார்மரை திருடிவிட்டு, இறந்தவரின் உடலை கங்கை நதியில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டது. இறந்தவரின் மனைவி காவல்நிலையத்தில், 'தன் கணவரைக் காணவில்லை' எனப் புகார் அளித்தப் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.