Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ...
`இனி அதிரடி' - திமுகவை போட்டுத்தாக்கும் சிபிஎம் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் - பின்னனி என்ன?
தி.மு.க-வை விமர்சிப்பதில் அ.தி.மு.க-வை விஞ்சி நிற்கிறது சி.பி.எம். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை அக்கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் எழுப்பி கூட்டணிக்குள் வெடி வைத்தார் கே.பாலகிருஷ்ணன்.
புதிய மாநிலச் செயலாளரான பெ.சண்முகமும் தி.மு.க-வை கடுமையாக டீல் செய்வது தமிழ்நாடு அரசியல் ஹாட் டாப்பிக். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த ஜனவரி 2 முதல் 5ம் தேதிவரை நடைபெற்றன. மாநிலச் செயலாளராக பதவி வகித்த கே.பாலகிருஷ்ணன் கடந்த 5-ம் தேதி பெ.சண்முகத்தை புதிய மாநிலச் செயலாளராக முன்மொழிய அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யபட்டார்.
முன்னதாக மாநாட்டில் உரையாற்ற கே.பாலகிருஷ்ணன் ``தமிழ்நாட்டில் பட்டா கேட்டுப் போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேரணிக்கு அனுமதியில்லை எனத் தெரிவிப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
எதற்காக அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது” என விளாசினார். அதே மாநாட்டில் பேசிய சி.பி.எம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் ``சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்திய தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரை பதித்த போராட்டமாக இருந்தது. ஆனால், தொழிலாளர் சங்கத்தைப் பதிவுசெய்ய திமுக அரசு மறுத்துவருகிறது” என வேதனையடைந்தார்.
சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணின் கருத்துகளுக்கு தனது கண்டனத்தை முரசொலி பதிவு செய்தது. இந்நிலையில் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி மாற்றப்பட்ட சூழலில் பிரச்னை ஓய்ந்ததாகக் கருதியது அறிவாலயம். ஆனால் பொறுப்பேற்ற பெ.சண்முகமோ.. தனது அறிமுக உரையிலேயே `பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தை முன்னெடுப்போம்' எனப் பேசியவர் முரசொலி விமர்சனத்தையும் கண்டித்தார். பிறகு தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ஆளுநர் உரையின் தகவல்கள் ஏமாற்றமளிக்கிறது என விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``கூட்டணியில் இருப்பதால் தி.மு.க-வின் எதேச்சதிகார போக்குகளை அடையாளத்துக்குக்கூட எதிர்க்காமல் மெளனம் காத்து வருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். சில விவகாரங்களில் அடையாளத்துக்கு அறிக்கை விடுவதோடு நிறுத்திக்கொண்டவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் வலுவான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக சாம்சங் ஊழியர்கள் சங்கம் அமைக்கும் தொடர் போராட்டத்தை சங்கம் அமைக்கும் முன்பாகவே கைவிட்டனர். இந்தப் போக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி கட்சியின் கடைநிலை தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது.
ஆட்சிக்கும் காவல்துறைக்கும் எதிரான மனநிலை மக்களுக்கும் கட்சியினருக்கும் இருக்கும் சூழலில் ஆட்சியாளர்களைப் பாராட்டிக் கொண்டிருந்தால் கட்சியின் எதிர்காலம் என்னாவதென சுதாரித்துக்கொண்ட சி.பி.எம். சட்டம் ஒழுங்கு, நிறைவேற்றாத வாக்குறுதிகள், காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் சாட்டை சுழற்றத் தொடங்கியிருக்கின்றது” என்றனர். கட்சி கட்டமைத்திருக்கும் வியூகத்துக்கு ஏற்ப மலைவாழ் மற்றும் விவசாய சங்க தலைவராக இருந்து காவல்துறை, அரசு மற்றும் வனத்துறைக்கு எதிராக கடுமையாகப் போராடி வந்த பெ.சண்முகத்தை மாநிலச் செயலாளராக நியமித்துள்ளனர்”
பொறுத்திருந்து பார்ப்போம்!