HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரமணியன்
சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த வைரஸ் தொற்று பற்றி யாரும் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிய மா.சுப்ரமணியன், ``இந்த வைரஸ் 50 ஆண்டுகளாக இருக்கிறது. 2001-ல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. HMPV தொற்று ஏற்பட்டால் 3 - 6 நாள்கள் சளி இருமல் போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே வேறு நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக எந்த சிகிச்சையும் இல்லை. 3 - 5 நாள்களில் இது தானாகவே குணமாகிவிடும். இந்தத் தொற்று 50 ஆண்டுகளாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் சேலத்தில் புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புள்ள 69 வயது நபர் மற்றும் சென்னையில் 45 வயது நபர் ஆகியோர் என இரண்டு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இருவருமே தற்போது நலமுடன் இருக்கிறார்கள். எனவே இது பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. இருப்பினும், வதந்திகள் மக்களை அச்சுறுத்தியிருக்கிறது. ஆனால், இது வீரியமிக்க வைரஸ் அல்ல.
அதேசமயம், வேறு நோய் பாதிப்புகள் மற்றும் பருவமழையொட்டி வருகின்ற நோய் பாதிப்புகள் இருப்பவர்கள், பொதுவெளியில் முகக் கவசம் அணிந்து சென்றால் நல்லது. ஒன்றிய அரசும் இதைத்தான் சொல்லியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு போன்ற பெரிய சுகாதார அமைப்புகள் இதுபற்றி பெரிதாகச் சொல்லவில்லை. எனவே இது சாதாரணமான ஒன்றுதான். எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவ கட்டமைப்பு பலமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs