தொடரை வென்றது நியூசிலாந்து: ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு!
உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!
காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவர் குடும்பத்தின் பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இருளாயி இறந்துவிட்டதாக போலியாக சான்று பெற்று, அவர் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக கடந்த 2024 டிசம்பரில் நிலம் கிரையம் செய்து அபகரித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த இருளாயி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கேட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், "நான் உயிரோடு இருக்கும்போதே, இறந்துவிட்டதாக முறைகேடாக சான்று பெற்று என் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக கிரையம் செய்திருப்பதாக அறிந்தேன்.
அதன்படி விசாரிக்கையில், கடந்த 2024 டிசம்பரில் திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்தில், எனது உறவினரான தங்கம் என்ற கார்மேகம் என்பவர் நிலத்தை கிரையம் செய்துகொடுக்க மற்றொரு உறவினரான ஜெயராஜ் அதை கிரையம் செய்துள்ளார். நான் உயிரோடு இருக்கும்போதே போலியாக என் பெயரில் இறப்புச்சான்று பெற்று கிரையம் செய்து அபகரித்த புல சொத்தினை பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என ஆட்சேபனை தெரிவிக்கிறேன். அதேசமயம், என்னை ஏமாற்றி நிலத்தை அபகரித்தது குறித்து ஜெயராஜிடம் கேட்டதற்கு, `நான் ஆளுங்கட்சியில் நிர்வாகியாக இருப்பதால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என என்னை மிரட்டுகிறார். ஆகவே, மிரட்டல் விடுத்த ஜெயராஜிடமிருந்து என் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, முறைகேடாக கிரையம் செய்த பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், ஒரு வாரத்திற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்து, இறப்புச் சான்றை ரத்து செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார்.