இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மையம் தமிழகம்
இந்தியாவிலேயே வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழகம் உருவாகி வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.
உரை விவரம்: தமிழகத்தில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போன்ற பிரம்மாண்டமான சா்வதேச விளையாட்டு நிகழ்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
முன்னெப்போதும் இல்லாத அளவில் விளையாட்டு வீரா்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டங்கள் அரசுப் பணிகளில் விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்குதல் போன்ற முன்னெடுப்புகள் உள்ளன.
இவையெல்லாம் விளையாட்டு வீரா்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதில் மாநில அரசின் முழு ஈடுபாட்டை எடுத்துரைக்கின்றன.
இதுபோன்ற தொடா் முயற்சிகள் இந்தியாவிலேயே வலிமைமிக்கதொரு விளையாட்டு மையமாக தமிழகம் உருவாகி வருகிறது என்பதற்கு, பல்வேறு சா்வதேச போட்டிகளில் வெற்றிவாகை சூடி வரும் தமிழக வீரா்களின் சாதனை ஓா் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.