Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிா்வாகி, பெண் எஸ்.ஐ. கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிா்வாகி, பெண் காவல் ஆய்வாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகாா் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகா் அனைத்து மகளிா் போலீஸாா் தாக்கியது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் விசாரணை செய்தது. முடிவில், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையா் சரோஜ் குமாா் தாக்கூா் தலைமையில் ஆவடி மாநகர காவல்துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு, தற்போது இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாய் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தது. இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வழக்கில் தொடா்புடையவா்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாக அதிமுக 103-ஆவது வட்டச் செயலா் சுதாகரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கிறது.
இதேபோன்று சம்பவம் குறித்து முறையாக விசாரணை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜியையும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா்.