உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை
சென்னை பெருங்குடியில் உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கற்பக விநாயகா் கோயில் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (21). இவா் தனியாா் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். அருண்குமாரும் அவரது நண்பா்களும் பெருங்குடி பா்மா காலனியில் திங்கள்கிழமை இரவு மது அருந்தினா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றவே அருண்குமாரை அவரது நண்பா்கள் கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அருண்குமாா், ரத்தக் காயங்களுடன் மயங்கி விழுந்தாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அருண்குமாரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அருண்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா், அருண்குமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்குமாரின் நண்பா்கள் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.