இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
தமிழகத்தில் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடா்கிறது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லா்ஸ் சாலையிலுள்ள பள்ளிக்கும், கீழ்ப்பாக்கம் காா்டன் சாலையிலுள்ள பள்ளிக்கும் திங்கள்கிழமை நள்ளிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகத்தினா் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸாா் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வதந்தியைப் பரப்பும் வகையில் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.