மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
Doctor Vikatan: உப்பும் சர்க்கரையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?
Doctor Vikatan: சர்க்கரையையும் உப்பையும் அறவே தவிர்த்த உணவுகள் ஆரோக்கியமானவையா? இவை இரண்டும் உடலுக்குத் தேவையில்லையா? சர்க்கரையோ, உப்போ இல்லாத உணவுகளை உண்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.
ஆரோக்கியத்த்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கட்டாயம் தவிர்க்க வேண்டியவற்றில் முக்கியமானது வெள்ளைச் சர்க்கரை. அத்துடன் கார்பனேட்டடு பானங்கள் மற்றும் மைதா உணவுகளையும் தவிர்ப்பது இன்னும் சிறந்தது.
தீபாவளி, பொங்கல் போன்ற ஏதேனும் விசேஷ தினத்தன்று சர்க்கரை சேர்த்த உணவுகள் சிறிது சாப்பிடுவதில் தவறில்லை. மற்றபடி, சர்க்கரைநோய் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருமே வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக, வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, கடுக்காய் கலந்த தேன் போன்றவற்றை உபயோகிக்கலாம். வெள்ளைச் சர்க்கரைதான் கேடானது என்ற எண்ணத்தில், இவற்றை எல்லாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் கூடாது. கூடியவரையில் வீடுகளில் வெள்ளைச் சர்க்கரை வாங்குவதையே தவிர்ப்பது தான் சரியாக இருக்கும். காபி, டீ போன்றவற்றுக்குக்கூட சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம், சுவையாகவும் இருக்கும்.
ரத்த அழுத்த அளவைப் பொறுத்துதான் உப்பின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதுவே, லோ பிபி எனப்படும் குறை ரத்த அழுத்தம் இருந்தால் உணவில் உப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைகளில் 'ஹிமாலயன் பிங்க் சால்ட்' என்ற பெயரில் ஒருவகை உப்பு கிடைக்கும். பார்ப்பதற்கு பேபி பிங்க் நிறத்தில் இருக்கும். இதில் மினரல்கள் அதிகமிருப்பதால், சாதாரண உப்போடு ஒப்பிடும்போது ஆரோக்கியமானது. சமையல் உள்பட எல்லா உணவுகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆக, வெள்ளைச் சர்க்கரையை அறவே தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உப்பை பொறுத்தவரை, உங்கள் வீட்டாரின் பிபி அளவைப் பொறுத்து உபயோகிப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.