செய்திகள் :

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார் அந்த விவசாயி?

post image
``என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்..." இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது.

'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் எதுவும் செய்ய முடியாதா?" என இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள், உண்ணாவிரதப் போராட்ட களத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாருக்காக இந்தக் கூட்டம்? யார் அவர்? ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்? அவரின் கோரிக்கைதான் என்ன? இத்தனைக் கேள்விகளுக்கு விடைத்தேடினோம்.

விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவால்

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் 2019-ம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சட்டங்களில் ஒன்று, மூன்று வேளாண் சட்டங்கள். அந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியபோதும், எந்தவித விவாதமுமின்றி அதன் நடைமுறைகள் நான்கு நிமிடங்களில் முடிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்த விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில், சுமாா் ஓராண்டைக் கடந்தும் போராடினா். பஞ்சாபின் 32 விவசாய சங்கங்களுடன் ஹரியானாவின் சங்கங்களும் இணைந்து சம்யுக்த கிசான் மோர்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைக்கப்பட்டது.

இந்த விவசாயிகள் போராட்டக்களங்களில் பலமுறை தீப்பற்றி உள்ளது. கூடாரங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் குடிசைகள் எரிந்து நாசமாகின. ஆனாலும், அவர்கள் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தில் 669-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். 9 விவசாயிகள் அரசின் மீதான விரக்தியில் தற்கொலை செய்துகொண்டனர். இத்தனைக் களேபரத்துக்குபிறகு, பிரதமர் மோடி '3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது' என அறிவித்து, அந்த சட்டத்தை வாபஸ் பெற்றார்.

Farmers Protest | விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் ஃபரீத்கோட் மாவட்டத்தின் தல்லேவால் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான ஜக்ஜித் சிங் தல்லேவால். ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு 17 ஏக்கர் விவசாய நிலமும், விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் வாழ்க்கை மீதும் தீவிர அக்கறை இருக்கிறது. அதனால், விவசாயிகளுக்காக இயங்கும் பாரதிய கிசான் யூனியனில் 1982-83 ல் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படத் தொடங்கினார். அன்னா ஹசாரேவால் ஈர்க்கப்பட்ட இவர், பஞ்சாபின் மால்வா பகுதியில் விவசாயிகள் போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுவந்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக 2018-ம் ஆண்டில் 11 நாள் அன்ஷானை போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி முடிந்திருந்தார்.

அதன்மூலம் அசல் கிசான் அந்தோலனில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக வளர்ந்தார். அவருடைய கடினமான நிலைப்பாடுகள், தீவிரமான அர்ப்பணிப்புக்காக அவருடைய வட்டாரத்தில் மிகவும் ஈர்ப்புக்குரியவராக புகழ் பெற்றார். இதற்கிடையில்தான் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது.

இந்தப் போராட்டக்களத்தில் தேசிய அளவில் கவனம் பெற்றவர்களில் ஜக்ஜித் சிங் தல்லேவாலும் ஒருவர். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தீவிரமாக பணியாற்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால், அரசுடன் நேரடியாக மோதுபவராகவே தொண்டர்களால் கருதப்படுகிறார். வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் தலைவர்களாக அங்கீகாரம் பெற்றவர்களில் சிலர், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களைக் கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கிய இடம் இவருக்கு உண்டு.

விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவால்

மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்ற மத்திய அரசு, விவசாயப் பொருள்களுக்கான MSP எனும் குறைந்தபட்ட ஆதரவு விலையை நிர்ணயிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் விவசாய அமைப்புகளான கிசான் மஸ்தூர் மோர்ச்சாவும், ஐக்கிய கிசான் மோர்ச்சாவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 13, 2024 அன்று 'கிசான் அந்தோலன்-2.0'-ன் கீழ் டெல்லி செல்ல அறிவித்திருந்தன. ஆனால், அவர்களின் வாகனங்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் அரசு நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயிகள் அங்கேயே போராட்டத்தை ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் - காவல்துறைக்கும் பலகட்டங்களில் மோதல் வெடித்தது. இதில், சுபாகரன் சிங் எனும் இளைஞர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். ஆனாலும், விவசாயிகள் பின்வாங்காமல் 9 மாதங்களாக அதே இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகள்

இந்த நிலையில்தான், போராட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அரசு தரப்பு முயன்றுவருவது ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால், வன்முறையைத் தவிர்க்க நவம்பர் 26-ம் தேதி குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளுடன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போதுவரை பெரிதும் கவனம் பெறாமல் இருந்த இந்தப் போராட்டம், இந்த உண்ணாவிரதம் தொடங்கியதும் வெகுமக்களால் கவனம் பெறத் தொடங்கியது.

ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டம், விவசாயிகளின் இயக்கத்தில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துவருகின்றனர்.

விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவால்

இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது. ரயில் மறியல் செய்ய முயன்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். சில பகுதிகளில் ஜக்ஜித் சிங் தல்லேவால் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்கள், ஒவ்வொருநாளும், ஹரியானா - பஞ்சாபிலிருந்து ஜக்ஜித் சிங் தல்லேவால் இருக்கும் கானெளரி பகுதிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றனர். விவசாயிகளின் வாகனங்கள் மட்டும் 5 - 6 கி,மீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் இளைஞர் ஒருவர், 'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் ஏதாவது செய்ய முடியாது?" எனப் பேசியிருக்கிறார். இப்போது 'கிசான் அந்தோலன் 2.0' வின் அடையாளமாக, தலைவராக ஜக்ஜித் சிங் தல்லேவால் உருவாகியிருக்கிறார்.

தொடர்ந்து 43-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஜக்ஜித் சிங் தல்லேவால், உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம், அவரின் உண்ணாவிரதத்தை மட்டும் முடித்துக்கொள்ளும் எண்ணத்தை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டது. மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில், போராட்டம் நடத்திய விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க செப்டம்பர் மாதம் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று ஜக்ஜித் சிங் தல்லேவாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அவரை மருத்துவ உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், கோரிக்கை நிறைவேறும்வரை எந்த மருத்துவ உதவியும் வேண்டாம் என அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவால்

இதற்கு முன் பஞ்சாப் மாநில காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் தனது போராட்டத்தைத் தொடர நான்கு நாள்களுக்குப் பிறகு எல்லைக்குத் திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்பி பர்தாப் பஜ்வா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், எம்.எல்.ஏ பர்கத் சிங், எஸ்.ஏ.டி தலைவர் பல்விந்தர் சிங் புந்தர், ஹரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடா, ஆம் ஆத்மி எம்.பி மல்விந்தர், சுற்றுச்சூழல் ஆர்வலர் பல்பீர் சீச்சேவால், முன்னாள் அமைச்சர் சேத்தன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஜக்ஜித் சிங் தல்லேவாலை சந்தித்திருக்கின்றனர்.

43-வது நாளான இன்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஜக்ஜித் சிங் தல்லேவாலின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து 5 ரிவர்ஸ் ஹார்ட் அசோசியேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, ஜக்ஜித் சிங் தல்லேவாலை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறது.

விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவால்

அவரின் உடல் நிலைக் குறித்துப் பேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் ஸ்வைமான் சிங், ``அவரின் உடல்நிலை சிவப்பு எச்சரிக்கையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த 12 மணி நேரத்தில் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு, உடனடி சிகிச்சை தேவை. இதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியது எங்கள் கட்டாயக் கடமையாகக் கருதுகிறேன். தாமதமின்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், அவரது அலுவலகம் அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் நேரமின்மை காரணமாக அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரமின்மை காரணமாக விவசாயிகள் குழுவைச் சந்திக்க குடியரசுத் தலைவரால் இயலவில்லை என்பதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என பதிலளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறது சம்யுக்த் கிசான் மோர்ச்சா.

TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பும் சர்க்கரையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?

Doctor Vikatan:சர்க்கரையையும் உப்பையும் அறவே தவிர்த்த உணவுகள் ஆரோக்கியமானவையா? இவை இரண்டும் உடலுக்குத் தேவையில்லையா? சர்க்கரையோ, உப்போ இல்லாத உணவுகளை உண்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் சொல்கி... மேலும் பார்க்க

Canada: ``கனடாவின் அடுத்தப் பிரதமர்?" - ரேஸில் முன்னணியில் இருக்கும் அனிதா ஆனந்த! - யார் இவர்?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தப்... மேலும் பார்க்க

Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!

சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm... மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?

Doctor Vikatan: சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன்மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் ... மேலும் பார்க்க