GRT: பொங்கலை பொன் பொங்கலாகக் கொண்டாடுவோம் - சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த ஜிஆர...
Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm... மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?
Doctor Vikatan: சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் மூளையில் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சையில் அது சரிசெய்யப்பட்டதாகவும் செய்திகளில் கேள்விப்பட்டோம். இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது... தலைவலியும் காய்ச்சலும் மூளை பாதிப்பின் அறிகுறிகளாக இருக்குமா? சமீபகாலமாக பல பிரபலங்களும் இதுபோன்ற பிரச்னையால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இந்தப் பிரச்னை எல்லோருக்கும் வரக்கூடியதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி
நீங்கள் கேள்விப்படுகிற அத்தனை சம்பவங்களையும் ஒன்றுபோல நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் பிரச்னையும் வெவ்வேறானது.
பிரெயின் அன்யூரிசம் (Brain aneurysm) எனப்படுவது, மூளையின் ரத்தக்குழாயில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது. இந்தப் பிரச்னைக்கான காரணம் பிறவியிலேயே இருக்கக்கூடும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.
மூளையின் ரத்தக்குழாயின் சுவர்கள், சாதாரண ரத்தக்குழாய் போல அல்லாமல், பலவீனமாக இருப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். இதன் வெளிப்பாடாக, ரத்தக்குழாயின் சுவரில் வீக்கம் ஏற்பட்டு, ரத்தக்குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும்.
ரத்தக்குழாய் வெடித்தால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தக்கசிவு ஏற்படுவது என்பது ஆபத்தான ஓர் அறிகுறி. இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறியாக திடீரென்றும் மிகத்தீவிரமாகவும் தலைவலி ஏற்படும். அதை 'தண்டர்கிளாப் ஹெட்டேக்' (Thunderclap Headache ) என்று சொல்வார்கள். அதையடுத்து திடீரென சுயநினைவை இழப்பார்கள். பக்கவாதம் வரலாம். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் ஆபத்தான பிரச்னை இது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். அது அளவைத் தாண்டும்போது, மூளையின் ரத்தக்குழாய் வெடிப்பதற்கான ரிஸ்க்கை அதிகரிக்கும். இந்தப் பிரச்னை வராமல் தவிர்ப்பதெல்லாம் சாத்தியமில்லை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இது பாதிக்கலாம் என்பதுதான் சோகமான உண்மை. ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் ஸ்ட்ரெஸ் இல்லாமலும் பார்த்துக்கொள்வதும் எல்லோருக்கும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.