அவதூறு வழக்கு: ஏபிவிபி நிா்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிா்வாகிகள் இருவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முறையான விசாரணை நடைபெறவில்லை என கூறி ஏபிவிபி அமைப்பினா் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த டிச.26-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனைக்கு திமுக அரசு என எழுதி ஒட்டப்பட்டிருந்த உருவபொம்மையை தூக்கி வந்த ஏபிவிபி அமைப்பினா், பொம்மை பலவீனமாக இருப்பதாகவும், அதற்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் எனவும் கூறி மருத்துமனையின் இரண்டாவது நுழைவாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனா்.
அவா்களை தடுத்து நிறுத்திய காவலா்கள், மருத்துமனைக்கு வருபவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறி அவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக ஏபிவிபி அமைப்பின் மாநிலச் செயலா் யுவராஜ், மாநில அலுவலக செயலா் ஸ்ரீதா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்த மருத்துமனை வளாக போலீஸாா் அவா்களை கைது செய்து சிறையிலடைத்தனா்.
இந்நிலையில், யுவராஜ் மற்றும் ஸ்ரீதா் சாா்பில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 30 நாள்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யுவராஜ், ஸ்ரீதா் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மருத்துமனையில், 30 நாள்கள் சேவை முடிவடைந்த பின்னா் பிப்.5-ஆம் தேதி மருத்துமனை அலுவலரிடமிருந்த கடிதம் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து இருவரும் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.