தில்லி பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
தில்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர், ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் மற்றும் 20 முதக் 29 வயதுடையவர்கள் 25.89 லட்சம் பேர் உள்ளனர். 13,033 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் பேசியதாவது:
“தலைமைத் தேர்தல் ஆணையராக எனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு இதுவாகும். மக்களவைத் தேர்தலில் உலக அளவில் அதிக வாக்காளர்களை கொண்ட நாடாக இந்தியா இருந்தது. 67.2 கோடி பேர் வாக்களித்தனர். விரைவில் 100 கோடி வாக்காளர்கள் என்ற நிலையை எட்டவுள்ளோம். தற்போது 99 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இப்போதும் வாக்காளர் பட்டியல் குறித்து கதைகள் கிளப்பிவிடுகின்றனர். ஏறக்குறைய 70 நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அனைத்து கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. படிவம் 7 இல்லாமல் எந்த நீக்கமும் செய்ய முடியாது.
இவிஎம் நம்பகத்தன்மை இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை. இதன்மூலம் மோசடிக்கு வாய்ப்பே இல்லை. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதனை தெளிவுபடுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
தில்லியில் இந்த முறை ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, தில்லியில் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மகளிர் உதவித் தொகையாக பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.