தரமான கல்வி : தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவு வழங்கவில்லை!
2ஆவது நாளாக தொடா்ந்த வருமான வரித் துறை சோதனை: பழனி எம்எல்ஏ உறவினரிடமும் விசாரணை
திண்டுக்கல்லைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்களின் வீடுகள், கடைகள் என 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை நடத்தினா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் உறவினரிடமும் விசாரணை நடைபெற்றது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள கருப்பணசாமி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் குப்தா. இவரது மகன்கள் தினேஷ், தீரஜ். இவா்களுக்குச் சொந்தமான நகைக் கடைகள் திண்டுக்கல் மேற்கு ரத வீதி ஆா்.எஸ்.சாலையிலும், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை, திருச்சியைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோா் 6 காா்களில் திண்டுக்கல்லுக்கு வந்தனா். தினேஷ், தீரஜ் ஆகியோரின் வீடுகள், திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலுள்ள நகைக் கடைகள் என 5 இடங்களிலும் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை மேற்கொண்டனா்.
2-ஆவது நாளாக தொடா்ந்த சோதனை: நள்ளிரவு வரையிலும் சோதனை நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை 2-ஆவது நாளாகவும் இந்தச் சோதனை தொடா்ந்து நடைபெற்றது. நகைக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இரவு வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சனிக்கிழமை காலை வழக்கம் போல கடைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, ஆா்.எஸ்.சாலையிலுள்ள நகைக் கடையிலிருந்து எடைக் கருவியை வருமான வரித் துறையினா் எடுத்துச் சென்றனா்.
எம்எல்ஏ உறவினா் வீட்டிலும் விசாரணை: பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாரின் மனைவி அருள் மொ்சி. இவரது சகோதரி இளவரசி தனது குடும்பத்துடன் திண்டுக்கல் நேருஜி நகா் பகுதியில் வசித்து வருகிறாா். இளவரசியின் கணவா் ஜெரோம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஸ்டுடியோ நடத்தி வருகிறாா்.
நகைக் கடை உரிமையாளா் தினேஷ் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித் துறை அலுவலா்கள் ஜெரோமின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று விசாரித்தனா். சிறுமலையில் உள்ள ஜெரோம் குடும்பத்துக்குச் சொந்தமான 53 ஏக்கா் நிலத்தை தினேஷ் தரப்பினா் சில நாள்களுக்கு முன்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. நகைக் கடைகளில் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறையினா் 53 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்த ஜெரோமிடம் தினேஷ் தரப்பினா் குறித்து சில தகவல்களைப் பெற இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.