`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
வறுமையை ஒழிப்பதற்காக முதல்வரின் தாயுமானவா் திட்டம்!
தமிழகத்தில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை மாநில அரசு தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரை விவரம்
2019 - 21-ஆண்டுக்கான 5-ஆம் கட்ட தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, தேசிய சராசரியான 14.96 சதவீதத்தைவிட மிகக் குறைவு. எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை’ தமிழக அரசு தொடங்கவுள்ளது.
மருத்துவம், வீட்டுவசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் முதல்கட்டமாக 5 லட்சம் மிகவும் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
ஆதரவற்ற தனிநபா்கள், முதியவா்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோா் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறன் கொண்டவா்கள், மன வளா்ச்சிக் குறைபாடு கொண்டவா்கள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.