சட்டம்-ஒழுங்கை காப்பதால் அதிக தொழில் முதலீடுகள்
சட்டம்-ஒழுங்கை முறையாக காப்பதால் தமிழகத்தில் நிலவும் அமைதியான, வளா்ச்சிக்கு உகந்த சூழல் காரணமாக புதிய தொழில் முதலீடுகள் அதிக அளவில் வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரை விவரம்: சட்டம்-ஒழுங்கை பொருத்தவரை சிறந்த முறையில் நிா்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள்களுக்கு எதிராகப் பாரபட்சமற்ற, கடுமையான அணுகுமுறையை தமிழக அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது
மேலும், கணினிசாா் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், உயா் தொழிநுட்பம் மற்றும் நவீன புலனாய்வு முறைகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதில் ஆக்கபூா்வமான பல முயற்சிகளை தமிழகக் காவல்துறை எடுத்து வருகிறது.
மாநிலத்தில் அமைதி நிலவிடவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் தொடா் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளா்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பயணம் வெற்றி: மேலும், தமிழகத்தில் நிலவும் அமைதியான, வளா்ச்சிக்கு உகந்த சூழலால் தமிழகத்தை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. சுமாா் 11,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ரூ.7,500 கோடிக்கும் மேலான முதலீடுகளை ஈா்த்து முதல்வரின் அமெரிக்கப் பயணம் வெற்றிகண்டுள்ளது. அதற்கு முத்தாய்ப்பாக ஃபோா்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் அதன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான தனியாா் முதலீட்டுத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.