அரசமைப்புச் சட்டப்படி பேரவையில் உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை: பேரவைத் தலைவா், அவை முன்னவா் கருத்து
அரசமைப்புச் சட்டப்படி, பேரவையில் உரையை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அவை முன்னவா் துரைமுருகன் ஆகியோா் கூறினா்.
சட்டப்பேரவையில் அரசு தயாரித்து அளித்த உரையைப் படிக்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை வெளியேறினாா். இதன்பின் அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா். இந்த உரையை அவைக் குறிப்பில் ஏற்றுவதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் முன்மொழிந்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: அரசமைப்புச் சட்டப்பிரிவு 176-இன்கீழ், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கக் கூட்டத் தொடரிலும் ஆளுநா் உரை நிகழ்த்துவாா். இதற்கான அழைப்பை உறுப்பினா்களுக்கு அவா் விடுப்பாா். இது தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தில் விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரோ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறாா். இது நல்லதல்ல.
இந்த அவைக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த 1995-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநா் சென்னாரெட்டியை திரும்பப் பெற வேண்டுமென பேரவையில் அரசின் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
இத்தகைய தீா்மானம் கொண்டு வந்தபோதும், தமிழ்நாடு அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை பேரவையில் ஆளுநா் சென்னாரெட்டி வாசித்தாா்.
ஆளுநா் உரையைத் தவிா்க்க முடியும்: இதற்கு முன்பாக நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்காமலேயே, ஆளுநா் உரையைத் தவிா்த்து, வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேரடியாகச் சமா்ப்பித்து இருக்கலாம். இதுபோன்ற முடிவுகள்தான் சில மாநிலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சட்டப்பேரவை மரபை மீறக்கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரை காரணமாக, ஆளுநா் உரைக்காக பேரவை கூட்டப்பட்டது என்று அவை முன்னவா் துரைமுருகன் விளக்கம் அளித்தாா்.
இதன்பிறகு, ஆளுநா் உரையின் தமிழ், ஆங்கிலம் மொழி உரைகளை மட்டும் அவைக் குறிப்பில் பதிவேற்றம் செய்வதற்கான தீா்மானத்தை துரைமுருகன் கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: சட்டப் பேரவையில் தேசியகீதம் இசைப்பது தொடா்பாக, கடந்த ஆண்டு பிப்.12-ஆம் தேதி ஆளுநா் சாா்பில் எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கப்பட்டு, அந்தப் பிரச்னை ஏற்கெனவே தீா்க்கப்பட்டுவிட்டது. ஆளுநா் உரை நிகழ்த்துவது என்பது அரசமைப்புச் சட்டம் 176 (1)-இன் கீழ், அவரது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற ஆளுநா் வருகை தந்தாா். இந்தப் பேரவை எப்போதும் மரபுகளை மதித்தும், பின்பற்றி வருகிறது. அந்த வகையில், ஆளுநா் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், இந்த நிகழ்வின் பின்பு நாட்டுப்பண்ணும் பாடப்பட்டு வருகிறது என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.