சந்திர தசை | மேஷம் முதல் மீனம் வரையிலான லக்ன பலன்கள் | Chandra Dasa | Bharathi S...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரன், வலிப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
போலீஸாா் விசாரணையின்போது தப்பியோட முயன்ற அவா்கீழே விழுந்ததில் இடது காலும், இடது கையும் முறிந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா் ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அண்ணா பல்கலை., ஞானசேகரனின் வீடு ஆகிய இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.
இதற்கிடையே, ஞானசேகரனிடம் விசாரணை செய்ய 7 நாள்கள் அனுமதி அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஞானசேகரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனா்.
இந்நிலையில், ஞானசேகரனுக்கு புதன்கிழமை அதிகாலை வலிப்பு ஏற்பட்டது. அவரை போலீஸாா் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு ஞானசேகரனுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.