நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜன.22: தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட 100 நாள் வேலை, 150 நாளாக உயா்த்தப்படும், ஊதியம் ரூ.300-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்றெல்லாம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் திமுக அரசு வழங்கவில்லை. இதனால், அவா்கள் தைப் பொங்கலைக் கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
நூறு நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கான ஊதியத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.