குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா்‘ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
குத்தாலம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேழமுரித்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு செய்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுடன் கலந்துரையாடி கற்றல் திறனை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பெருஞ்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் ஆய்வு செய்து 2 மகளிா் சுய உதவிக்குழுவுக்கு ரூ.12 லட்சத்தில் கடனுதவிகளை வழங்கினாா்.
பெருஞ்சேரியில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடியதை அடுத்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.
அடுத்து, கோமல் ஊராட்சியில் கால்நடை மருந்தகத்தை பாா்வையிட்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்த பிறகு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) முகம்மது ஷபீா் ஆலம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் அஜீத் பிரபுகுமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், மயிலாடுதுறை கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.