மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முதல் பட்ஜெட் தெரியுமா?
இந்தியாவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். யாருக்கெல்லாம் எவ்வளவு வரி, வளர்ச்சித் திட்டங்களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது, நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, நிதிக் கொள்கைகள் உள்ளிட்ட கவனிக்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இந்த மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும்.
மாத சம்பளம் வாங்கும் சாமானியர்கள் முதல் பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் வரை எல்லோரும் கவனிக்கும் இந்த பட்ஜெட் இந்தியாவில் முதல்முறையாக எப்போது தாக்கல்செய்யப்பட்டது தெரியுமா...
1856, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். அப்போது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய சிப்பாய்களின் பயன்பாட்டுக்குப் புதிதாக என்ஃபீல்டு பி-53 என்ற துப்பாக்கி கொண்டுவரப்பட்டது. இந்தத் துப்பாக்கிகளில் பயன்படுத்தும் தோட்டாக்களை, முதலில் அதன் கார்ட்ரிட்ஜ்களை வாயால் கடித்துத் துப்பி வீசிவிட்டு, துப்பாக்கிகளில் பயன்படுத்த வேண்டும். ஆனால், கார்ட்ரிட்ஜ்கள் பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்பினால் ஆனவை என்று சிப்பாய்கள் மத்தியில் தகவல் பரவவே, இது தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அவர்கள் நம்பினார். இது மெல்ல மெல்ல இந்திய சிப்பாய்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலைக்குக் கொண்டுசென்றது.
இதன் தொடர்ச்சியாக, 1857 மார்ச் 29-ம் தேதி, மங்கள் பாண்டே என்ற இந்திய சிப்பாய், பிரிட்டிஷ் லெப்டினன்ட்டை சுட முற்பட்டார். அதன் காரணமாக, ஏப்ரல் 8-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். இது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய சிப்பாய்கள் மத்தியில் சிறு பொறியாக விழவே, அடுத்த ஒரு மாதத்தில் சரியாக மே 10-ம் தேதி மீரட் நகரில் இந்திய சிப்பாய்கள், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதுவே, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் `சிப்பாய் கலகம்' என்றழைக்கப்படுகிறது.
இந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தால் பிரிட்டிஷ் அரசில் ஏற்பட்ட நிதிச் சிக்கலைச் சீர்படுத்தி, வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்தவும், புதிய காகித கரன்சியை நடைமுறைப்படுத்தவும், விக்டோரியா மகாராணி 1859-ல் ஜேம்ஸ் வில்சன் (James Wilson) என்பவரை இந்திய கவுன்சிலின் உறுப்பினராக நியமித்து, இந்தியாவுக்கு அனுப்பினர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இந்த ஜேம்ஸ் வில்சன் தான், 1843-ல் தொடங்கப்பட்ட The Economist என்ற நாளிதழின் நிறுவனர்.
இவரே, 1860 ஏப்ரல் 7-ம் தேதி இந்தியாவின் முதல் யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ஆங்கில மாதிரியில் வடிவமைக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில்தான் முதல்முறையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், ஆண்டுக்கு ரூ. 200-க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காகிதத்தாலான புதிய கரன்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பட்ஜெட் மூலம், நிதிச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்த ஜேம்ஸ் வில்சன், அதே ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தன்னுடைய 55-வது வயதில் கல்கத்தாவில் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அன்று அவர் கொண்டுவந்த வரி முறை, அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருக்கிறது. ஆனால், அதே வரி இன்று சாமானிய மக்களை வாட்டுவதற்கு, அரசுதான் காரணமாக இருக்க முடியும்.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், 1947 நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...