ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!
Sanju Samson : ``என் மகனைத் தனிமைப்படுத்துகிறார்கள்!" - சஞ்சு சாம்சன் தந்தை வேதனை
சமீப காலமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் எந்தவொரு தொடராக இருந்தாலும், அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் கூடியிருக்கிறது. அதற்கேற்றவாறு ஐ.பி.எல் உட்பட தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குறைந்தபட்சம் மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்காவது ஆடியிருக்கிறார். அதற்குப் பலனாக, 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.
ஆனால், 2022-ல் கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட்டை நேராக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், அந்தத் தொடர் முழுக்கவே ஒரு போட்டியில் கூட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், கடைசியாக விளையாடிய வங்காளதேசத்துக்கெதிரான டி20 தொடரில் ஒரு சதமும், தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 தொடரில் இரண்டு சதமும் அடித்து அசத்தினார்.
இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு ரிஷப் பண்ட்டை எடுத்த தேர்வுக் குழு, சஞ்சு சாம்சனை தேர்வு செய்யவில்லை. இதனால், `மற்ற வீரர்கள் சொதப்பினால் கம்பேக் கொடுப்பார்கள் என்று அவர்களுக்கு முன்பாக கூறும் நீங்கள், சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடும்போது கூட வாய்ப்பு கொடுக்காமலிருப்பது என்ன நியாயம்.' எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் தந்தை கேரளா கிரிக்கெட் அசோசியேசன் (KCA) மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
Sports Tak ஊடகத்திடம் பேசிய சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத், ``கேரளா கிரிக்கெட் அசோசியேசனால் கடந்த 10 - 12 ஆண்டுகளாக நாங்கள் பிரச்னையை எதிர்கொள்கிறோம். ஆனால், என்ன காரணம் என்றே தெரியவில்லை. சஞ்சுவுக்கு எதிராக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். அதுவும், கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் KCA சதித் திட்டம் தீட்டியது. அவர்களுடன் எங்களால் போராட முடியாது. என் மகன் பாதுகாப்பாக இல்லை. எல்லாவற்றுக்கும் சஞ்சு மீது குற்றம் சாட்டுவார்கள்.
அதனால், என் மகன் கேரளாவுக்காக விளையாடுவதை நிறுத்த வேண்டும். மேலும், `சஞ்சு, எங்களுக்கு விளையாடுங்கள்' என்று எந்த மாநிலமாவது வாய்ப்பளிக்க விரும்பினால், அதை வேண்டுகோளாக முன்வைக்கவும் நான் தயாராக இருக்கிறேன். சஞ்சு ஒரு தனிநபர், KCA பலம் வாய்ந்தது. அவர்கள், எங்களை ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சஞ்சு தனது வாழ்நாளில் 30 ஆண்டுகளை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார். ஆனால், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இப்போது, KCA-விலிருந்து அவர் வெளியேறினாலே எனக்கு போதும்." என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததற்கு, விஜய் ஹசாரே டிராபியில் அவர் பங்கேற்காததுதான் காரணம் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தாலும், விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாகச் செயல்பட்ட கருண் நாயர் (779), மயங்க் அகர்வால் (651) ஆகியோரில் ஒருவர் கூட சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.