Bollywood Threat mail: பாலிவுட் பிரபலங்களுக்கு வரும் கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள்! - போலீஸ் விசாரணை
சமீப காலமாகவே பாலிவுட் பிரபலங்களுக்குத் துப்பாக்கிச்சூடு மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் போன்றவை வந்த வண்ணமிருக்கின்றன.
குறிப்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது பாலிவுட்டை உலுக்கியது. இது மற்ற பாலிவுட் பிரபலங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலிவுட் பிரபலங்களான நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகரான சுகந்தா மிஸ்ரா மற்றும் நடன இயக்குநர் ரெமொ டிசோசா உள்ளிட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெயிலுக்குப் பதிலளிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜ்பால் நவுரங் யாதவ், மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் இதேபோல காவல்துறையில் புகாரளிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்தப் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள IP இணையதள முகவரியை வைத்து காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த கும்பலை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். பாலிவுட்டில் இப்படியான கொலை மிரட்டல்களும், வெடிகுண்டு மிரட்டல்களும் சமீபகாலமாக அதிகரித்து வருவது பிரபலங்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.