Rashmika Mandanna: 'இதுபோதும்; சந்தோஷமாக ஓய்வு பெற தயார் என்றேன்' - ராஷ்மிகா பேசியது என்ன?
புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. தனது காலில் அடிபட்டு கடந்த சில நாட்களாக ஓய்வு எடுத்து வரும் ராஷ்மிகா நடக்க முடியாத நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் ஓய்வு குறித்து ராஷ்மிகா பேசிய விஷயமும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக பேசிய அவர், “கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இயக்குநர் லட்சுமணனிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த ஒரு படம் போதும்...இதற்கு பிறகு நான் சந்தோசமாக ஓய்வு பெற்று விடுவேன் என்று சொன்னேன்.
அந்த அளவிற்கு என் வாழ்நாளில் என் விருப்பமாக கேட்கக்கூடிய ஒரு படமாக 'சாவா' அமைந்துவிட்டது. படத்தின் டிரைலரை பார்க்கும்போது விக்கி கவுசல் கிட்டத்தட்ட ஒரு கடவுள் போலவே காட்சியளிக்கிறார்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.