`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
Ind vs Eng : 'மேன் ஆப் தி மேட்ச் வருண்; வெளுத்தெடுத்த அபிஷேக்!' - இந்தியா எப்படி வென்றது?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்றிருக்கிறது. போட்டி இந்தியா பக்கமாக திரும்புவதற்கு சாதகமாக இருந்த தருணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய அணிதான் முதலில் பந்துவீசியிருந்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணி பந்துவீசி முடித்த போதே வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. பௌலிங்கை பொறுத்தவரைக்கும் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் எடுத்துக் கொடுத்து நல்ல மொமண்டம் கொடுத்தார். ஆனாலும் அணிக்கு தேவைப்பட்ட அந்த திருப்புமுனையை கொடுத்தது என்னவோ தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திதான். 4 ஓவர்களை வீசிய வருண் சக்கரவர்த்தி 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். அர்ஷ்தீப் சிங் பில் சால்ட், பென் டக்கெட் என இங்கிலாந்தின் ஓப்பனர்கள் இருவரையும் ஷாட் ஆட இடமே கொடுக்காமல் டைட்டாக வீசி வெளியேற்றினார். இந்த சமயத்தில்தான் ஹாரி ப்ரூக்கும் பட்லரும் கூட்டணி சேர்ந்தனர்.
இருவரும் இணைந்து 4.4 ஓவர்களில் 48 ரன்களை சேர்த்தனர். ஹர்திக் பாண்ட்யா ஒரே ஓவரில் 18 ரன்களை கொடுக்க அக்சர் படேல் 15 ரன்களை கொடுத்தார். இந்நிலையில்தான் வருண் சக்கரவர்த்தி 8 வது ஓவரை வீசினார். அவரது ஓவரிலும் ப்ரூக் பேக்வர்ட் பாய்ண்டில் ஒரு கட் ஷாட்டை ஆடி பவுண்டரி அடித்தார். ஆனால், அடுத்த டெலிவரியையே ஒரு சர்ப்ரைஸ் கூக்ளியாக வீசி ஸ்டம்பை பறக்க செய்தார். இதே ஓவரில் இன்னொரு கூக்ளியையும் வீசினார். அந்த கூக்ளிக்கு லிவிங்ஸ்டன் டக் அவுட். இங்கிலாந்து அணியின் பேட்டிங் மொத்தமும் பட்லரை சார்ந்தே இருந்தது. அவர்தான் அதிகபட்சமாக 44 பந்துகளில் 68 ரன்களை சேர்த்தார். தனியாக நின்று வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த அவரையும் 17 வது ஓவரில் வருண் வீழ்த்தினார். நின்றிருந்தால் பட்லர் நிச்சயம் சதத்திற்கு சென்றிருப்பார். அணியின் ஸ்கோரும் அதிகரித்திருக்கும். அதை நடக்கவிடாமல் செய்ததும் வருண் சக்கரவர்த்திதான். ஐ.பி.எல் இல் கொல்கத்தா அணிக்கு அதிகமாக ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடியிருப்பதால் இந்த மைதானத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக பந்துவீசினார்.
பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தி கலக்கியதை போல பேட்டிங்கில் அபிஷேக் சர்மா கலக்கினார். டார்கெட்டை வெறும் 12.5 ஓவர்களில் எட்டியதற்கு அபிஷேக்கின் அதிரடிதான் மிக முக்கிய காரணம். 20 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 34 பந்துகளில் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து விட்டார். க்ரீஸை நன்றாக பயன்படுத்தி முன்னேயும் பின்னேயும் இறங்கியும் ஏறியும் பெரிய பெரிய சிக்சர்களை பறக்கவிட்டார்.
'Bazball' ஆடும் இங்கிலாந்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அபிஷேக் மிரட்டினார். 'அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் தோல்வி பயமின்றி ஆடு என என்னை அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து அப்படியொரு செய்தி சொல்லப்படும்போது அது எனக்கு தனி நம்பிக்கையை கொடுக்கிறது. என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட சுதந்திரம் கொடுக்கிறது.' என அபிஷேக் சர்மா பேசியிருக்கிறார். உண்மையிலேயே, அபிஷேக் சொல்வதை போல அவர் ஆடும் ஆட்டம் மனநிலை சம்பந்தப்பட்டதுதான். எந்த பயமும் இல்லாமல் அவுட் ஆனாலும் பரவாயில்லை என துணிச்சலாக ஆட வேண்டும் என்கிற அவரின் மனநிலைதான் இந்தியாவுக்கும் வெற்றியை கொடுக்கிறது.
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டி20 அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை அப்படியே விட்டாலே போதும். 'Experimental' ஆக முயற்சிக்கிறேன். அணியை இராணுவக் கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்கிறேன் என எதாவது பர்னிச்சரை கம்பீர் உடைக்காமல் இருந்தாலே இந்த அணி சாதித்துவிடும்.