ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில், பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகள் எடுக்கலாமா?
Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட நான் பீரியட்ஸை தள்ளிப்போட மாத்திரைகள் எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், இப்போது மெனோபாஸ் நேரம் என்பதால் எப்போது பீரியட்ஸ் வரும் என்பதையே கணிக்க முடியாமல் இருக்கிறது. ஒரு மாதம் 28 நாள்களில் வருகிறது. அடுத்து 40 நாள்களில் வருகிறது. இப்படித் தள்ளிப்போகும்போது ஏதேனும் விசேஷம் வந்தால், மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நீங்கள் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். இந்த வயதில் உங்களுக்கு பீரியட்ஸ் தள்ளிப்போகும் அல்லது பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வரும். சினைப்பைகளின் இயக்கமானது குறையத் தொடங்கும்.
இந்த வயதில் பீரியட்ஸை தள்ளிப்போட மாத்திரைகள் எடுக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பானது. அப்படி நீங்கள் எடுக்கும் மாத்திரையானது உங்கள் பீரியட்ஸ் சுழற்சியை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கும். ஏனென்றால், பீரியட்ஸை தள்ளிப்போடச் செய்கிற மாத்திரைகள் புரொஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன்களை உள்ளடக்கியவையாக இருக்கும். இந்த மாத்திரைகளை தொடர்ந்து ஐந்து முதல் ஆறு நாள்களுக்கு எடுத்துக்கொள்வீர்கள். ஏற்கெனவே மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை இருக்கும்போது இந்த மாத்திரைகள் தேவையில்லை என்பதே என் கருத்து.
மெனோபாஸில் இருக்கும் நீங்கள், பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுப்பதால், அது உங்கள் இயற்கையான மெனோபாஸ் புராசெஸையும் பாதிக்கும். புரொஜெஸ்ட்ரான் மாத்திரையானது மார்பகங்கள் மிருதுவாவது, தலைவலி, உடல் உப்புசம், மனநிலையில் மாற்றங்கள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே, மெனோபாஸ் காலத்து அவதிகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் மேலும் சிரமத்தைக் கொடுக்கலாம்.
பொதுவாக பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகளை நிறுத்தியதும் பீரியட்ஸ் வர வேண்டும். மெனோபாஸ் ஸ்டேஜில் இருப்பதால், மாத்திரைகளை நிறுத்தியதும் உங்களுக்கு இயல்பாக வர வேண்டிய பீரியட்ஸ் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த வகையில் உங்களைப் போன்ற பெண்களுக்கு இந்த மாத்திரைகள் சரியானவையல்ல.
பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகளை மாதவிலக்கு சுழற்சி சீராக உள்ள இளம்பெண்களுக்குத்தான் மருத்துவர்கள் பொதுவாகப் பரிந்துரைப்பார்கள். மிக மிக அவசியம் என்ற சூழ்நிலையில், அவர்களது உடல்நலத்தைப் பரிசோதித்துவிட்டு மருத்துவர்கள் அவர்களுக்கு இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். அவற்றின் பக்க விளைவுகள் குறித்தும் விளக்குவார்கள். மற்றபடி, பெரிமெனோபாஸ் ஸ்டேஜில் உள்ள பெண்களுக்கு இந்த மாத்திரைகள் ஏற்றவையல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.