``எங்கும் மாசு; உழைப்பு வீணாகிவிட்டது'' -இந்தியா ஓபன் பேட்மிண்டனில் ஆடிய டென்மார்க் வீராங்கனை வேதனை
டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்ற டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt), "போட்டிகள் நடத்தப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் இருந்தது" என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
ஜனவரி 14 முதல் 19 வரை டெல்லியிலுள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
இதில், முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றில் சீனாவின் வாங் ஸி யீ-யிடம் (Wang Zhi Yi) 21-13 16-21 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தாயகம் திரும்பிய மியா பிளிச்ஃபெல்ட் இன்ஸ்டாகிராமில், ``இந்தியாவில் நீண்ட மற்றும் மன அழுத்தமான வாரத்துக்குப் பிறகு இறுதியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு வருடங்களில் இப்போது இந்தியாவின் ஓபன் 750 போட்டியின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது.
மோசமான சூழல் காரணமாக, எனது பல வார உழைப்பு வீணாகிவிட்டது. என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மாசான காற்று மற்றும் விளையாட்டு அரங்கின் எல்லா இடங்களிலும் பறவைகள் மலம் கழிப்பது, போன்ற அழுக்கான இடங்களில் நாம் பயிற்சி எடுத்து விளையாடுவது யாருக்கும் சரியானது கிடையாது. முதல் சுற்றில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சிதான். ஆனால், இரண்டாவது சுற்றில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், எனக்குத் திருப்தியில்லை.” என்று, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பை (BWF) டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இவரின் இத்தகைய பதிவுக்கு, போட்டி நடைபெறுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் ஸ்டேடியம் மற்றும் உள்கட்டமைப்பை அணுக முடிந்ததால் நிறைய சவால்கள் எதிர்கொண்டதாகப் பதிலளித்த இந்திய பேட்மிட்டன் சங்கம் (BAI), மாற்று இடத்துக்கான ஆய்வுகளை BWF உடன் கலந்தாலோசித்து வருவதாகவும், உள்கட்டமைப்பு வசதிகளைத் தீவிரமாக மதிப்பீடு செய்துவருவதாகவும் தெரிவித்தது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...