கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
BCCI: 'கோச் அனுமதி இல்லாம இதெல்லாம் Not Allowed..!'- இந்திய வீரர்களுக்கு 10 கட்டுப்பாடுகள்?
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பிசிசிஐ இந்திய அணியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது. அதன் முடிவில் வீரர்களுக்கு சில தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அதன்படி பிசிசிஐ வீரர்களுக்கு விதித்திருக்கும் அந்த கட்டுப்பாடுகள், 'இந்திய அணியில் ஆடும் வீரர்கள் அத்தனை பேரும் உள்ளூர் தொடர்களிலும் ஆடியே ஆக வேண்டும். சர்வதேச போட்டிகளின்றி இலகுவாக இருக்கும்பட்சத்தில் அந்த சமயத்தில் உள்ளூர் போட்டிகளை ஆடும் தகுதியோடு இருக்க வேண்டும்.'
'அனைத்து வீரர்களும் வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அணியின் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும். அதைவிடுத்து குடும்பத்துடன் தனியாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். வீரர்கள் ஒன்றாக பயணிப்பதன் மூலம் அவர்களுக்குள் குழு மனப்பான்மையை வளர்க்க முடியும். ஒருவேளை யாராவது தனியாக பயணிக்க விரும்பினால் அணியின் பயிற்சியாளரிடமும் தேர்வுக்குழுத் தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.'
வீரர்கள் போட்டிகளின் போது தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, '45 நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று தொடரில் ஆடும்போது இரண்டு வாரங்களுக்கு குடும்பத்தினர் வீரர்களுடன் தங்கிக் கொள்ளலாம். அதற்கு குறைவான நாட்களுக்கான தொடரின் போது ஒரு வாரம் மட்டும் குடும்பத்தினர் வீரர்களுடன் நேரம் செலவிடலாம்.'
'போட்டிகளுக்கான பயணங்களின் போது குறிப்பிட்ட அளவிலான லக்கேஜ்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் எடுத்து வரும் லக்கேஜ்களுக்கான செலவை வீரர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.'
'வீரர்கள் தங்களுக்கென தனியாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சமையல் கலைஞர், உதவியாளர் ஆகியோரை அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும்.'
'போட்டிகளின் போது தனிப்பட்ட முறையில் விளம்பரங்களில் நடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.'
'பிசிசிஐ சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.'
'போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி செஷன்களின் போது ஒட்டுமொத்த அணியும் விடைபெறும் போதே அனைவரும் விடைபெற வேண்டும். தன்னுடைய பயிற்சி முடிந்துவிட்டதென யாரும் சீக்கிரம் கிளம்பக்கூடாது.'.
'ஒரு தொடர் எதிர்பார்த்த தேதியை விட முன்கூட்டியே முடிந்துவிட்டதெனில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பயணத்திட்டத்தின்படி எஞ்சிய நாட்களையும் அணியோடு செலவிட்டுவிட்டுதான் வீரர்கள் விடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தாமாகவே அணியிலிருந்து விடைபெற்று கிளம்புவதை தவிர்க்க வேண்டும்.'
'வீரர்கள் தங்களின் கிட் பேக் போன்ற உடைமைகளை பெங்களூருவில் உள்ள 'Center of Excellence' க்கு அனுப்பும்போது அணி நிர்வாகத்துடன் சரியாக பேசி ஒத்துழைத்து அனுப்ப வேண்டும். தனிப்பட்ட முறையில் பொருட்களை அனுப்பி அதற்கு செலவு ஏற்படும்பட்சத்தில் வீரர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.' என்பது போன்ற 10 விதிமுறைகளை பிசிசிஐ விதிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.