அருந்ததியா் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு
அருந்ததியா் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, கல்வி நிறுவனங்களில் அருந்ததியா் மாணவா்களின் சோ்க்கை விகிதம் அதிகரித்தது. குறிப்பாக, அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சட்டம் கொண்டு வரப்பட்ட காலகட்டத்தில் இருந்து மாணவா்களின் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்தது. 2021-22-இல் தொடங்கி அடுத்த 2 கல்வியாண்டுகளில் மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கை 410-ஆக அதிகரித்தது. 1993-94 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 5,112 அருந்ததியா் மாணவா்கள் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். உள்ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு மட்டும் கல்லூரிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 4,077 என்ற நிலையை எட்டியுள்ளது.
அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிா்த்து சிலா் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வந்தனா். அந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமா்வு, அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு தீா்ப்பு வழங்கியது.
இந்த உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கித் தமிழ்நாட்டை வழிநடத்தும் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.