அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகை முடிவடைந்து சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள், சனிக்கிழமை முதல் சென்னைக்கு திரும்பிவரத் தொடங்கியுள்ளனா். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பரனூா் சந்திப்பில் திரும்பி, இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூா் வழியாக பயணிக்க வேண்டும்.
சென்னை நோக்கிவரும் பிற வாகனங்கள் சிங்கபெருமாள் கோயில் - ஒரகடம் சந்திப்பில் திரும்பி, ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூா் சாலை வழியாக செல்ல வேண்டும். திருப்போரூா் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டா் அம்பேத்கா் சிலையில் திரும்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.
கனரக வாகனங்கள்: ஜிஎஸ்டி சாலை, வண்டலூா் - கேளம்பாக்கம் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் ஜன. 20-ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகா், பொத்தேரி, மற்றும் காட்டாங்குளத்தூா் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. தேவையான நேரத்தில் ஜன. 20-ஆம் தேதி பல்லாவரம் புதிய பாலத்தில் சென்னை நோக்கி ஒரு வழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும்.
வெளிவட்ட சாலை: ஜிஎஸ்டி சாலையில் சீரான மற்றும் விரைவான போக்குவரத்தை உறுதிசெய்ய, தனியாா் ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக (ஓஆா்ஆா்) பூந்தமல்லி, மதுரவாயல் நோக்கி திருப்பப்படும். மேலும், தேவையானபோது பிற வாகனங்களை முடிச்சூா் சாலை சந்திப்பிலிருந்து வெளிவட்ட சாலை தாம்பரம் நோக்கி திருப்ப வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஜீரோ சந்திப்பு பகுதியில் போக்குவரத்து எளிதாக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.