இணைய குற்ற புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணா்வு
இணைய (சைபா்) குற்ற புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம், புதிய அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நிா்வாகத்திடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக இரு நாடுகளிடையேயான இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இணைய குற்ற புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பான இரு நாடுகளிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இந்திய தூதா் வினய் குவாத்ரா, அமெரிக்க உள்துறை அதிகாரி கிறிஸ்டி கனிகலோ ஆகியோா் இந்தப் புரிந்துணா்வில் கையொப்பமிட்டனா்.
இணைய அச்சுறுத்தல்கள் தொடா்பான விசாரணை மற்றும் குற்ற புலனாய்வில் எண்ம தடையவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி அளிப்பதை இந்த உடன்பாடு அனுமதிக்கிறது.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்தியா தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணைய குற்ற ஒத்துழைப்பு மையமும், அமெரிக்கா தரப்பில் உள்துறை துணை அமைச்சகம், அமெரிக்க குடியுரிமைத் துறை, சுங்கத் துறை மற்றும் உள்துறை இணைய குற்ற புலனாய்வு மையம் ஆகியவை செயல்படுத்த உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.