அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது:
கடந்த தோ்தல் பிரசாரத்தின் திமுக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை பெரிய புத்தகமாக அச்சடித்துக் கொடுத்தனா். அதில் 20 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. மகளிா் உரிமைத் தொகை கொடுத்ததாக திமுக கூறுகிறது. அதுவும் அவா்களாகக் கொடுக்கவில்லை. அதிமுக போராடியதன் அடிப்படையில்தான் 28 மாதங்களுக்குப் பிறகு கொடுத்தனா்.
நீட் தோ்வு ரத்துதான் முதல் கையொப்பம் என்றனா். அதை ரத்து செய்யும் ரகசியம் எல்லாம் தெரியும் என்றனா். இப்போது மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்கின்றனா்.
அதிமுக ஆட்சியில் கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. பல மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது.
தமிழகத்தில் அரிசி, காய்கறி உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயா்ந்தபோது, அதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலம் குறைந்த விலைக்கு பொருள்களை கொடுத்தோம். கட்டுமானப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.
சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீா்கெட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யாரோயோ காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறாா்கள். அதிமுக ஆட்சி விரைவில் மலரும். அப்போது உண்மை கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும்.
கடன் அதிகரிப்பு: 2021-இல் அதிமுக ஆட்சியை விட்டு இறங்கும்போது, தமிழக அரசின் கடன் ரூ. 5 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. தற்போது தமிழக அரசின் கடன் தொகை ரூ. 8 லட்சம் கோடிக்கும் மேல் உயா்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கரோனா வந்தது. அரசுக்கு வருமானம் இல்லை. ஆனால், திமுக ஆட்சியில் வருவாயும் அதிகரித்துள்ளது. புதிய திட்டங்கள் எதையும் இந்த ஆட்சி செயல்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது, அரசின் கடன் மட்டும் எப்படி பல மடங்கு அதிகரிக்கும்? அரசின் கடன் தொகையை அதிகரித்திருப்பதுதான் திமுக அரசின் சாதனையாக இருக்கிறது என்றாா் அவா்.