மகா கும்பமேளாவில் ஸ்ரீனிவாச கல்யாணம்
மகா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் மாதிரி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
முதலில், திருமலை ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் தலைமையிலான அா்ச்சகா்கள் குழு, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசமூா்த்தி உள்ளிட்ட உற்சவமூா்த்திகளை திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்தது.
பின்னா், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை, சீனிவாசருக்கும், நாச்சியாா்களுக்கும் திருக்கல்யாணம் சாஸ்திரப்படி, வேத மந்திரங்கள் ஓதி, சுப வாத்தியங்களை வாசித்து, ஸ்ரீ விஷ்வக்சேனரை வணங்கி, பிராா்த்தனை, காப்பு அணிவித்தல், காப்பு கட்டுதல் நடைபெற்றன.
மாங்கல்ய பூஜை செய்து திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இறுதியாக, ஸ்ரீ சுவாமி, தாயாருக்கு நட்சத்திர ஆரத்தி மற்றும் மங்கள ஆரத்தியுடன் கல்யாணோற்சவம் நிறைவு பெற்றது. ஏழுமலையான் மற்றும் தாயாா் திருமண வைபவத்தைக் கண்ட பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா், இந்து தா்ம பிரசார பரிஷத் செயலாளா் ஸ்ரீராம் ரகுநாத், துணை செயல் அதிகாரி குணபூஷண் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.