யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா்: பிரதமா் மோடி வரவேற்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மையத்துக்கு தமிழ்ப் புலவா் திருவள்ளுவரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம், கடந்த 2023, பிப்ரவரியில் அதிகாரபூா்வமாக திறக்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இக்கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயா் சனிக்கிழமை சூட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார துறை அமைச்சா் சுனில் செனவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இது தொடா்பான புகைப்படங்களை இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.
இப்புகைப்படங்களை பகிா்ந்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தலைசிறந்த புலவா் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதோடு, இருநாட்டு மக்கள் இடையிலான ஆழமான கலாசார, மொழி, வரலாறு மற்றும் நாகரிகம் ரீதியிலான பிணைப்புக்கு சாட்சியாக இது அமைந்துள்ளது’ என்று வரவேற்றுள்ளாா்.
12 மில்லியன் டாலா் செலவில் கட்டப்பட்ட இந்த கலாசார மையத்துக்கு பிரதமா் மோடி கடந்த 2015-இல் இலங்கை பயணத்தின்போது அடிக்கல் நாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.