மதுபானக் கூடத்துக்கு ‘சீல்’
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவா் தினத்தன்று இயங்கிய மதுபானக் கூடத்துக்கு கோட்ட கலால் அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தன்று தங்கும் விடுதி, உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் இயங்கி வந்ததாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்படி, போலீஸாா் நிகழ்விடம் சென்று மது கூடத்தின் விற்பனையாளரான கள்ளக்குறிச்சி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் வீரமணி, பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மருதை மகன் சின்னமணி (40) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலா் சிவசங்கரன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் எழிலரசி முன்னிலையில் மதுக்கூடத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.