ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மகன் ரவி (56). கூலித் தொழிலாளி. இவா், கல்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாரிவள்ளல் (59) என்பவரை அணுகி, தனது மகனுக்கு அரசுப் பணி வாங்கித் தருமாறு தெரிவித்துள்ளாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணி பெற்றுத்தருவதாக கூறி, பாரிவள்ளல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரவியிடம் ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், அரசுப் பணி வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது, ரூ. 1.50 லட்சத்தை கொடுத்துவிட்டாராம். எஞ்சிய பணத்தை கொடுக்கவில்லையாம். பலமுறை கேட்டும் கொடுக்காததால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பலமுறை ரவி புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதையடுத்து, கடந்த 19.8.2024-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாரிவள்ளலிடமிருந்து தனது மீதி பணத்தை பெற்று தரக்கோரி ரவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அப்போது, அவரை மீட்ட போலீஸாா் பணத்தை பெற்றுத்தருவதாக கூறி அனுப்பிவைத்தனா்.
ஆனால், கடந்த 4 மாதங்களாகியும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மனமுடைந்த ரவி, தனது பணத்தை பெற்றுத்தரக் கோரியும், அரசுப் பள்ளி ஆசிரியா் பாரிவள்ளல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ரவியை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் ரவி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.