பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!
முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 102 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தினேஷ் சண்டிமால் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 22 ரன்களும், குசல் மெண்டிஸ் 21 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மேட் குன்ஹிமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
165 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆன இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்களும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 39 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா!
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் மற்றும் மேட் குன்ஹிமேன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் டோட் முர்பி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.