செய்திகள் :

TVK : ``என் அப்பா இறந்தப்போ விஜய் சார் செஞ்ச அந்த செயல்" - நெகிழும் த.வெ.க கொ.ப.செ ராஜ் மோகன்

post image
தவெக கட்சிக்கான மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் விஜய். அந்தப் பட்டியலில் பேச்சாளர் ராஜ்மோகனும் ஒருவர். கொள்கைப் பரப்புச் செயலாளர் என்கிற பெரிய பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பேச்சாளர், சமூக வலைதளப் பிரபலம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்ட ராஜ் மோகன் விஜய் தரப்புடன் எப்படித் தொடர்பானார்? கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி எப்படி வழங்கப்பட்டது? அவரிடமே தொடர்புகொண்டு பேசினோம்.
ராஜ் மோகன்

மகிழ்ச்சியில் இருந்த ராஜ்மோகனிடம் வாழ்த்துகள் சொல்லிவிட்டு விஜய்யின் அரசியலோடு எப்படி தொடர்புப்பட்டீர்கள் என கேட்டு முடிப்பதற்குள் கடகடவென பேசத்தொடங்கினார். ``விஜய் அவர்கள் கட்சி தொடங்கியது வேண்டுமானால் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதியாக இருக்கலாம். ஆனால், அவர் அதற்கு முன்பே பல சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பாகவே ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். தங்கை அனிதாவின் வீட்டிற்கே சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரின் வீட்டிற்கும் சென்று அவர்களின் பக்கம் நிற்பதை உறுதி செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களோடு களத்தில் நின்றிருக்கிறார்.

இப்படி எத்தனையோ விஷயங்களைக் குறிப்பிடலாம். இன்னொரு பக்கம் இந்த எல்லா பிரச்னைகளிலும் நானும் களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறேன். சமூக வலைதளங்களில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்திருக்கிறேன். விகடனின் நம்பிக்கை விருதுகளில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பமும் மேடையேறிய போது ஒரு மணி நேரம் அவர்களின் வலியை உடனிருந்து உணர்ந்து கடத்தியிருக்கிறேன். விஜய் அவர்கள், நான் மற்றும் எங்களுக்கிடையே இருந்தவர்கள் என எல்லோரும் ஒத்த அலைவரிசையில் இருந்தோம். அதனால்தான் இந்த இணைப்பு நிகழ்ந்தது. பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார் என முழுக்க முழுக்க இந்த மண்ணுக்குத் தேவையான அரசியலை விஜய் பேசுகிறார். அதனால் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் மகிழ்வோடு தவெகவில் இணைந்தேன்.

விஜய்

கொள்கைப் பரப்புச் செயலாளர் என்பது மிகப்பெரிய பதவியாயிற்றே. விஜய்யை நேரில் சந்தித்த போது என்ன சொன்னார்?

விஜய்யின் அரசியல் தமிழகத்திற்கு மாற்றமாக இருக்கும் என்பதற்கான உதாரணமே நான்தான். வாரிசு, பொருளாதாரம், சாதி என எனக்கு எந்தப் பின்புலமுமே கிடையாது. நானே ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் கூட இப்படிப்பட்ட ஒருவனுக்கு இவ்வளவு பொறுப்பை கொடுப்பேனா என்பது தெரியாது. ஆனால், அவர் அதைச் செய்திருக்கிறார். எவ்வளவு நாள்தான் பின்புலம் இருப்பவர்கள் மட்டுமே பதவிகளிலும் பொறுப்புகளிலும் அமர்வது? அது மாற வேண்டும் என அவர் நினைத்திருக்கிறார். விஜய் ஒரு தங்கமான மனிதர். அவரை நேரில் சந்தித்தபோது எங்களைவிட அவர் அவ்வளவு உற்சாகமாக இருந்தார். முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு விடைத்தாளை வழங்கும் ஆசிரியரைப் போல மகிழ்வாக இருந்தார். நானும் இதை ஒரு பதவியாகப் பார்க்கவில்லை. பொறுப்பாகப் பார்க்கிறேன். அதிகாரமில்லாதவர்களின் குரலாக ஒலிக்க எனக்குத் தளபதி கொடுத்திருக்கும் வாய்ப்பு இது.

அரசியல் பயணத்தைத் தொடங்குகிறீர்கள். உங்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?

அறிவிப்பு வெளியானதிலிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. கட்சிப் பாகுபாடே இல்லாமல் வாழ்த்துகிறார்கள். என்னுடைய குடும்பத்தினர்தான் மிகுந்த நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தவெகவின் மாநாட்டுக்கு முன்பாக நிர்வாகிகளுக்கென ஒரு அரசியல் பயிற்சிப் பாசறையை நடத்தியிருந்தார்கள். அதில் பேச என்னையும் அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாள்தான் என்னுடைய அப்பாவுக்கு நெஞ்சு வலி. ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டார். தவெக நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமா என யோசித்துக்கொண்டிருந்தேன். சிகிச்சை முடிந்து ஓரளவுக்கு தேறியிருந்த அப்பா என்னை அழைத்தார். 'எனக்கு 77 வயசாகுது. இதுக்கு முன்னாடியும் நெஞ்சு வலி வந்துருக்கு. ஒன்னும் ஆகாது. நீ போய்ட்டு வா. இது உனக்கு நல்ல வாய்ப்பு.' என வாழ்த்தி அனுப்பினார். இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்து விட்டு காலையில் வேகவேகமாக கிளம்பி நிகழ்வுக்கு சென்றேன். அப்பா ஐ.சி.யூவில் இருந்த செய்தி கேட்டு அவர்களே பதறிவிட்டார்கள். இருந்தாலும் அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு வந்தேன். மாநாட்டுக்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் அப்பா தவறிவிட்டார்.

விஜய்

என் வாழ்வின் துயரமான நிகழ்வு அது. அந்த சமயத்தில் விஜய் சார் எனக்குப் பல முறை போன் செய்து ஆறுதல் கூறினார். தேவையான உதவிகளை செய்துகொடுத்தார். இத்தனைக்கும் அப்போது மாநாட்டுக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அத்தனை பரபரப்பான சூழலிலும் எனக்கு போன் செய்து 'நீங்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம். குடும்பத்தோடு இருங்கள்.' எனக் கனிவோடு கூறினார். அக்கா அமெரிக்காவிலிருந்து வர வேண்டியிருந்தது. அப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த 3 நாளும் தவெக தொண்டர்கள் வீட்டு வாசலிலேயே இருந்து தேவையான உதவிகளையெல்லாம் செய்து கொடுத்தனர். அப்போதே குடும்பத்தினர் அத்தனை பேரும் நெகிழ்ந்துவிட்டனர். என்னுடைய மனைவி அம்மாவெல்லாம் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். மொத்தக்குடும்பமும் இதை ஒரு நன்றிக்கடனைத் திரும்ப செலுத்தும் நிகழ்வாக பார்க்கிறார்கள்.

கட்சியில் இணைந்தவுடனே கொ.ப.செ பதவி, `இவருக்கெல்லாம் இந்தப் பதவியா?' என உங்களை சமூக வலைதளங்களில் ட்ரோலும் செய்கிறார்களே.

அதிலிருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா எனப் பார்க்கிறேன். உலகிலேயே அதிகம் அவமானப்படுத்தப்பட்ட சிலை அம்பேத்கரின் சிலைதான். சொந்த மக்களாலயே அதிகமாக கருத்துச் சித்திரங்களில் கிழிக்கப்பட்டவர் அம்பேத்கர்தான். அப்படிப்பட்ட அண்ணலை மனதில் ஏந்தியிருக்கும் ராஜ்மோகன் இதற்கெல்லாம் கலங்கிவிட மாட்டேன்.

விஜய்

நாளை தவெக இரண்டாமாண்டு தொடக்க விழா இருக்கிறது. பெரியார் உட்பட கொள்கைத் தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைக்கிறார். பெரியார் பற்றிய சமீபத்திய சர்ச்சைகளுக்கான பதிலை விஜய் பேசுவாரா?

நானும் அதற்காகத்தான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்து இவரைப் பற்றி பேசவில்லை அவரைப் பற்றி பேசவில்லை என்கிற விமர்சனங்களுக்கு தலைவர் மூடுவிழா நடத்துவார்.

விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர்... த.வெ.க பவர் சென்ட்டரான ஜான் ஆரோக்கியசாமி யார்?

கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரின் இணைப்பைத் தொடர்ந்து, உற்சாகத்தில் மிதக்கிறது தமிழக வெற்றிக் கழக வட்டாரம். புதிதாக வந்தவர்களுக்கும் சேர்த்து பொறுப்புகளை அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய், ... மேலும் பார்க்க

"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

தன் தொகுதியிலுள்ள முத்துப்பட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்களைப் பொறுத்தவரையில் ஏழை, எளிய மக... மேலும் பார்க்க

Sweden: குரானை எரித்து போராட்டம் நடத்திய நபர் சுட்டுக் கொலை - சுவீடனில் பரபரப்பு!

Sweden: குரானை எரித்து கலவரங்களுக்கு வித்திட்ட சல்வான் மோமிகா என்ற நபர், அவரது அப்பார்ட்மென்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டில் உள்ள, ஹோவ்ஸ்ஜோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்ப... மேலும் பார்க்க

பட்னாவிஸ், ஷிண்டேயைக் கைது செய்ய உத்தவ் அரசு முயன்றதா? விசாரணை நடத்தும் மகா. பாஜக கூட்டணி அரசு

மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தல... மேலும் பார்க்க

Seeman: "நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு; பின்னணி என்ன?

"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள புகழேந்தி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏ... மேலும் பார்க்க