"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?
தன் தொகுதியிலுள்ள முத்துப்பட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்களைப் பொறுத்தவரையில் ஏழை, எளிய மக்களுக்குப் பயனுள்ள வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என விரும்புகிறோம். வக்பு வாரிய மசோதாவில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார்.
பொய்யாகப் பேசும் இப்படி ஒரு முதலமைச்சரைப் பெற்றதற்கு நாம் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரசாங்கம், காவல்துறை சரியில்லை, சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது என்று நீதிமன்றமே சொல்லியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், யார் அந்த சார் என்பது போய், இப்போது யார் அந்த கார் என்று பேசப்பட்டு வருகிறது. காரில் வந்தவர்கள் தி.மு.க-வினர் இல்லை என்று சொல்ல தி.மு.க-காரர்கள் காவல்துறையினரிடம் பேசுகிறார்கள். தி.மு.க கொடியை மட்டும் கட்டியுள்ளார்கள். ஆனால் தி.மு.க-வினர் இல்லை என்று காவல்துறையினர் சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பூதாகரமாக மாற்றிப் பேசுகிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால் எங்கள் ஆட்சியை மக்கள் குறை சொன்னார்களா? மீத்தேன் திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதல்வர் பேசுகிறார். சோஷியல் மீடியாவில் குரல் கொடுப்பவர்களைத் தற்போது காணோம். அதனால் மக்களே இப்போது சோசியல் மீடியாவில் எடுத்துச் சொல்லி இந்த திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சியை வெறுக்கிறார்கள்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரும் வரை 9 மாதமாக தி.மு.க அரசு தூங்கியது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதற்கு எதிராகப் பேசினார். ஆனால், வெற்றி வெற்றி வடிவேல் சொல்வதுபோல இன்று மு.கஸ்டாலின் பேசியிருக்கிறார். அதுபோல் மத்திய சுரங்கத் துறை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாமலை நாடகம் நடத்துகிறார். டங்ஸ்டன் கனிமத் திட்டம் வந்ததற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். இந்த அளவிற்கு மக்களைப் போராட்டம் நடத்த வைத்தது தேவையா? பதற்றம் தேவையா? எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட பின்புதான் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு முடிவு கிடைத்தது.
இந்த ஆட்சிக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. 200 சீட், 200 சீட் என முதல்வர் ஸ்டாலின் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொடுத்ததைப் பேசி வருகிறார். ஊடகத்தினரை தி.மு.க பயமுறுத்துகிறது.
கஞ்சா கடத்துபவர், திருடுபவர், மக்களை ஏமாற்றுபவர்கள்தான் தி.மு.க கொடியைப் பயன்படுத்தி வருகிறார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அ.தி.மு.க ஆட்சிதான் அடுத்த மலரும், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அனைவரும் அண்ணன் தம்பியாகப் பழகி வருகிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமுதல் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் நடக்கிறது. வேங்கை வயல் பிரச்னையை திருமாவளவன் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்கவில்லை. கந்தரும் சிக்கந்தரும் ஒன்றாக இருப்பதாகத் திருப்பரங்குன்றம் மலையைச் சொல்வார்கள்.
2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரும்போது ஐந்து வயது சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாதுகாக்கப்படுவார்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs