தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திரும...
Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' - ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு, 'இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை!' என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

திருமாவளவன் பேசுகையில், 'ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தவெக இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது.

இதனால் நான் மனப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன் எனும் விளக்கத்தை ஆதவ் தந்தார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தவெக சார்பில் பெரியாரின் கொள்கைகளைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என ஆதவ் சொன்னார். எங்களுக்கு எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை.' என்றார்.